
ஐக்கிய அரபு நாடுகளில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான இந்திய அணியில் கேப்டன் கோலி விடுவிக்கப்பட்டுள்ளது பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. அங்கு ஏற்கெனவே டி 20 தொடரைக் கைப்பற்றி, ஒரு நாள் போட்டித் தொடரை இழந்தது. அதன் பின் தற்போது நடைபெற்று வரும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 3-1 என இழந்துள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட்களை இழந்த இந்தியா, நாட்டிங்ஹாம் டெஸ்டில் அபாரமாக விளையாடி வென்றது.
தொடரை சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்த நிலையில் செளதாம்ப்டன் டெஸ்ட்டில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று தொடரை இழந்தது. ஏற்கெனவே லார்ட்ஸ் டெஸ்டில் கேப்டன் கோலி கடும் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
5-ஆவது டெஸ்ட் ஆட்டம் வெள்ளிக்கிழமை லண்டனில் நடைபெறுகிறது. அதில் வென்று 3-2 என தொடரில் ஆறுதல் வெற்றியாவது பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப் பயணம் நிறைவடைந்து பின் ஐக்கிய அரபு நாடுகளில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபை, அபுதாபியில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணிக்கு 18-ஆம் தேதியும் 19-ஆம் தேதி பாகிஸ்தானுடனும் தொடக்க சுற்று ஆட்டங்கள் உள்ளன.
இப்போட்டி நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்க முடியாத நிலையில் நடக்கிறது. இதற்கிடையே ஆசியப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. தொடர்ந்து ஆட்டச் சுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் கோலிக்கு ஓய்வு தரும் வகையில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷிகர் தவன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர் தோனியும் இடம் பெற்றுள்ளார். இளமை, அனுபவம் நிறைந்த அணியாக இருந்தாலும், இந்திய அணியில் கோலி இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது,
இந்தியாவில் நடப்பதாக இருந்த ஆசியக் கோப்பை போட்டி, பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல் இருந்ததால், ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றப்பட்டது. இந்திய அணி அங்குள்ள மைதானங்களில் விளையாடிய அனுபவம் இல்லாமல் உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தனது பெரும்பாலான போட்டிகளை அந்த மைதானங்களில் விளையாடி உள்ளது.இதனால் அதன் வீரர்களுக்கு சொந்த மைதானத்தில் விளையாடியது போன்ற கூடுதல் அனுபவம் உள்ளது சாதகமாகும்.
18-ஆம் தேதி இந்தியா தனது முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது. குறிப்பாக துபை மைதானத்தில் இதுவரை விளையாடியதில்லை. இந்திய அணியில் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. நம்பிக்கையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாத நிலையே தொடருகிறது. மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு ஆகியோர் 4-ஆம் நிலையில் விளையாட வாய்ப்பு தரப்படும்.
ஜாதவ் சில ஓவர்கள் பந்துவீசவும் செய்வார் என்பதால் அவருக்கு வாய்ப்பு தரப்படலாம். இது 2019 உலகக் கோப்பையை மனதில் கொண்டு மேற்கொள்ளப்படும். மேலும் கேப்டன் கோலி அணியில் இல்லாதது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சிறந்த பேட்ஸ்மேன் ஒருவர் இல்லாதது கடும் விளைவை ஏற்படுத்தும். கடந்த 10 ஆண்டுகளாக மூன்றாம் நிலை பேட்ஸ்மேனாக அவர் தான் அணியை வழிநடத்தி வருகிறார். ரன் சேர்க்கையில் தொய்வு ஏற்பட்டாலும், தனது துடிப்பான போக்கால் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுகிறார்.
அவர் இல்லாதது பின்னடைவை தான் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் கோலியையே பெரிதும் சார்ந்திருக்காமல் மிடில் ஆர்டரை வலுப்படுத்தவும் அணி நிர்வாகத்துக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ரோஹித் சர்மா அல்லது கே.எல் ராகுல் இந்த இடத்தை நிரப்புவார்களா என போக போகத் தெரியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







