ஊதியம் வழங்காததால் விளையாட மறுத்த யுவ்ராஜ் சிங் அணி: டி20 போட்டியில் பரபரப்பு!
இருப்பினும் ஊதியம் வழங்காமல் விளையாட மாட்டோம் எனக் கூறினார்கள் வீரர்கள்...


ஊதியம் வழங்காத காரணத்தால் குளோபல் டி20 கனடா போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊதியம் பெறாமல் மைதானத்தில் களமிறங்கமாட்டோம் என யுவ்ராஜ் சிங் தலைமையிலான டொரோண்டோ நேஷனல்ஸ், ஜார்ஜ் பெய்லி தலைமையிலான மாண்ட்ரல் டைகர் ஆகிய அணிகள் போர்க்கொடி எழுப்பின. இதனால் இரு மணி நேரம் கழித்து நேற்றைய டி20 ஆட்டம் நடைபெற்றுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் வெல்லவேண்டிய கட்டாயம் யுவ்ராஜ் சிங் அணிக்கு இருந்தது. இருப்பினும் ஊதியம் வழங்காமல் விளையாட மாட்டோம் எனக் கூறினார்கள் வீரர்கள். இதே புகாரை இதர அணி வீரர்களும் கூறினார்கள். ஒப்பந்தத்தின்படி சொல்லப்பட்ட பணத்தை வழங்காமல் ஆட்டம் கிடையாது என்றார்கள்.
விதிமுறைகளின்படி, குளோபல் டி20 கனடா போட்டி தொடங்குவதற்கு முன்பு வீரர்களுக்கு அதிகபட்சமாக 15% சம்பளம் வழங்கப்பட்டிருக்கவேண்டும். முதல் சுற்றின் முடிவில் அதிகபட்சமாக 75% வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் பல அணிகளின் வீரர்களுக்கு இதுவரை பரிசுகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே செவ்வாய் அன்று வேறு இரு அணிகளின் வீரர்கள் இதே குற்றச்சாட்டை முன்வைத்து விளையாட மறுத்துள்ளார்கள். எனினும் அப்போதைக்குச் சில வீரர்களுக்கு மட்டும் 45% சம்பளத்தை வழங்கியுள்ளன அவ்விரு அணிகளின் நிர்வாகங்கள். மழை காரணமாக அந்த ஆட்டமும் நடைபெறவில்லை. இதுதவிர, கடந்த வருடப் போட்டியில் பங்கேற்ற சில வீரர்களின் சம்பளமே இன்னும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
யுவ்ராஜ் சிங் தலைமையிலான டொரோண்டோ நேஷனல்ஸ், ஜார்ஜ் பெய்லி தலைமையிலான மாண்ட்ரல் டைகர் ஆகிய இரு அணிகளின் வீரர்களும் தங்களுடைய விடுதியை விட்டு வெளியே வராமல் நேற்று போராட்டம் செய்தார்கள். ஊதியம் வழங்கு, பிறகு விளையாடுகிறோம் என்று திட்டவட்டமாக இரு அணிகளும் கூறின. இதன்பிறகு இரு அணிகளின் உரிமையாளர்களும் வீரர்களுடன் பேசி நிலைமையைச் சுமூகமாக்கினார்கள். இதையடுத்து டி20 ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய யுவ்ராஜ் சிங் அணி 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஜார்ஜ் பெய்லி அணி, 154 ரன்கள் மட்டும் எடுத்ததால் யுவ்ராஜ் சிங் அணி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பிளேஆஃப்-பில் இடம்பிடித்தது. நேற்றைய ஆட்டத்தில், காயம் காரணமாக யுவ்ராஜ் சிங் பங்கேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...