லோதா பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்ய பிசிசிஐ முடிவு: ஒப்புதல் அளிக்குமா உச்சநீதிமன்றம்?

பிசிசிஐ நிர்வாக கட்டமைப்பை சீரமைக்கவும், வெளிப்படையாக நடத்தவும், பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை நியமித்தது உச்சநீதிமன்றம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிசிசிஐ நிர்வாக கட்டமைப்பை சீரமைக்கவும், வெளிப்படையாக நடத்தவும், பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை நியமித்தது உச்சநீதிமன்றம். 

அதன்படி, பிசிசிஐ தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலர், பொருளாளர் பதவிக்கு இந்தியராக இருக்க வேண்டும், 70 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது, அமைச்சர் அல்லது அரசுப் பதவியில் இருக்கக் கூடாது, தொடர்ந்து 9 ஆண்டுகள் பிசிசிஐயில் நிர்வாகக் குழு பொறுப்பில் இருந்திருக்கக் கூடாது என பல்வேறு பரிந்துரைகளை லோதா குழு பரிந்துரைத்தது.

இதற்கு பிசிசிஐ நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தும், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டும் அது தோல்வியில் முடிந்தன. 

இந்நிலையில், பிசிசிஐயின் 88-வது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் லோதா குழு பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், உச்சநீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் அதை நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, அவை உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,

"இந்தக் கூட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது" என்றார்.

பிசிசிஐயின் தற்போதைய விதிப்படி, 2 முறை தொடர்ச்சியாக நிர்வாகியாக பதவி வகித்தால், அடுத்து 3 ஆண்டுகள் கழித்துதான் பொறுப்புக்கு வர முடியும். எனவே, பிசிசிஐ தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. ஆனால், லோதா பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்வது மூலம், கங்குலி 2024 வரை பிசிசிஐ தலைவராக நீடிக்கலாம்.

மேலும், வரும் காலத்தில் சட்டதிருத்தம் குறித்த பிசிசிஐயின் இறுதி முடிவை எடுக்க பொதுக் குழுவில் 4-இல் 3 பகுதி ஆதரவு இருந்தாலே போதுமானதாக இருக்க வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இருக்க வேண்டாம் எனவும் பிசிசிஐ விரும்புகிறது. இங்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு சட்டத்திருத்தங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது நடைமுறையில் சாத்தியமற்றது என அதிகாரிகள் கருதுகின்றனர்.

பிசிசிஐ பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com