

இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 207/5 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை எடுத்து வென்றது. 6 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 50 பந்துகளில் 94 ரன்களை விளாசிய கேப்டன் கோலி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இந்தப் போட்டி தொடர்பான புள்ளிவிவரங்கள்:
208 - இலக்கை விரட்டுவதில் டி20 சர்வதேச ஆட்டத்தில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது. இதற்கு முன்பு 2009-ல், மொஹலியில் இலங்கைக்கு எதிராக 207 ரன்கள் என்கிற இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. அந்தச் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
3 - இந்திய அணி வெற்றிகரமாக 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை விரட்டியுள்ளது. வேறெந்த அணிகளும் இத்தனை தடவை இந்தச் சாதனையைச் செய்ததில்லை. ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் இரு முறை 200 ரன்கள் இலக்கை விரட்டியுள்ளது. இந்திய அணியின் இந்த மூன்று வெற்றிகளும் இந்தியாவில் கிடைத்தவை. இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக நான்கு முறை 200 ரன்களுக்கும் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று முறை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
94* - விராட் கோலியின் அதிகபட்ச டி20 ஸ்கோர் இது. இதற்கு முன்பு, 2016-ல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 ரன்கள் எடுத்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இது விராட் கோலியின் 23-வது அரை சதம். வேறெந்த பேட்ஸ்மேனும் இத்தனை அரை சதங்கள் எடுத்ததில்லை.
60 - நேற்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் கொடுத்த ரன்கள் இவை. சர்வதேச டி20 ஆட்டத்தில் வேறெந்த மே.இ. பந்துவீச்சாளரும் இத்தனை ரன்களைக் கொடுத்ததில்லை.
29 - 1000 டி20 ரன்களை எடுக்க கே.எல். ராகுலுக்குத் தேவைப்பட்ட இன்னிங்ஸ்களின் எண்ணிக்கை. விரைவாக 1000 ரன்களை எடுத்த மூன்றாவது பேட்ஸ்மேன், ராகுல். இதற்கு முன்பு பாபர் அஸாம் 26 இன்னிங்ஸ்களிலும் கோலி 27 இன்னிங்ஸ்களிலும் 1000 ரன்களை எடுத்துள்ளார்கள்.
12 - அதிக தடவை ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற முகமது நபியின் சாதனையைச் சமன் செய்துள்ளார் கோலி. டி20 ஆட்டத்தில் இந்த வருடம் அவர் பெறும் இரண்டாவது ஆட்ட நாயகன் விருது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.