
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கைரன் போலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தினேஷ் ராம்தினுக்குப் பதிலாக நிகோலஸ் பூரான் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணியில் ரோஹித் சர்மாவும், கேஎல் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஆடுகளம் சற்று மந்தமாக இருந்ததால், பந்து சரியாக பேட்ஸமேன்களுக்கு வரவில்லை. இதனால், பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிப்பதில் சிரமம் ஏற்பட்டது. ராகுல் 11 பந்துகளில் 11 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3-வது வரிசை பேட்ஸ்மேனாக விராட் கோலிக்குப் பதிலாக ஷிவம் துபே களமிறக்கப்பட்டார்.
தொடக்கத்தில் சற்று திணறினாலும், அதன்பிறகு அவர் பந்தை சரியாகக் கணிக்கத் தொடங்கினார். இதனிடையே ரோஹித் சர்மா 15 ரன்களுக்கு ஹோல்டர் பந்தில் போல்டானார். இதன்பிறகு, விராட் கோலி ஷிவம் துபேவுக்கு ஒத்துழைப்பு தந்து விளையாட அவர் அதிரடியில் மிரட்டினார். சிக்ஸர்களாகப் பறக்கவிட்ட அவர் 27 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்மூலம், கோலியின் வியூகம் இந்திய அணிக்கு பலனளித்தது. ஆனால், அரைசதம் அடித்த அவர் 30 பந்துகளில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இருந்தபோதிலும், ரிஷப் பந்த் அவ்வப்போது சிக்ஸரையும், பவுண்டரியையும் அடித்து ரன் ரேட்டை ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால், அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் வந்த வேகத்தில் சிக்ஸர் அடிக்க முயன்று 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ரிஷப் பந்த் ஓரளவு அதிரடி காட்ட ஜடேஜாவும் சொதப்பலை வெளிப்படுத்தி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. ரிஷப் பந்த் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 4 ஓவரில் இந்திய அணி 26 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேஸ்ரிக் வில்லியம்ஸ் மற்றும் ஹேடன் வால்ஷ் தலா 2 விக்கெட்டுகளையும், ஹோல்டர், பியரே மற்றும் காட்ரெல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.