ஒரே நாளில் இரு சதங்கள் அடித்து ஆச்சர்யம் ஏற்படுத்திய ஆஸி. பேட்ஸ்மேன்கள்: நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்ட இலங்கை!

ஒரே நாளில் இரு ஆஸி. பேட்ஸ்மேன்கள் பெரிய சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்கள்...
ஒரே நாளில் இரு சதங்கள் அடித்து ஆச்சர்யம் ஏற்படுத்திய ஆஸி. பேட்ஸ்மேன்கள்: நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்ட இலங்கை!
Published on
Updated on
2 min read

நான்கு மாதங்கள், ஆறு டெஸ்டுகள்.... ஒரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டெஸ்ட் சதம் அடிக்க நீண்ட நாள் காத்திருக்கவேண்டிய நிலைமை. கடைசியாக, அக்டோபரில் துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராக கவாஜா டெஸ்ட் சதம் அடித்ததுதான் ஒரு ஆஸி. பேட்ஸ்மேன் கடைசியாக எடுத்த டெஸ்ட் சதம். மேலும் உள்ளூரில் கடந்த ஒருவருடமாக எந்தவொரு  ஆஸி. பேட்ஸ்மேனும் சதமடிக்கவில்லை. கடந்த வருடம்  ஜனவரி மாதம் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் கவாஜாவும் மிட்செல் மார்ஷும் சதமடித்தார்கள்.

1882-83-ல் தான் உள்ளூர் சீஸனில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட டெஸ்டுகளில் ஒரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனும் சதமடிக்காமல் இருந்துள்ளார்கள். அந்த நிலைமை மீண்டும் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்த ஆஸி. ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டமாக அமைந்துவிட்டது. இந்த சீஸனின் கடைசி டெஸ்ட் என்பதால் இன்னும் பரபரப்பாக இருந்தார்கள். 

அத்தனை சோதனைகளும் இன்று நிகழ்ந்த இரு சதங்களால் மறக்கடிக்கப்பட்டு விட்டன. ஆம். ஒரே நாளில் இரு ஆஸி. பேட்ஸ்மேன்கள் பெரிய சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்கள்.

இந்த மகிழ்ச்சி அவ்வளவு சுலபமாகக் கிடைக்கவில்லை. கேன்பெராவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஹாரிஸ் 11 ரன்களிலும் லபுஸ்சான் 6 ரன்களிலும் கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் என்கிற நிலையை எதிர்கொண்டது ஆஸ்திரேலிய அணி. அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜோ பர்ன்ஸும் டிராவிஸ் ஹெட்டும் நிலைமையை ஒரேடியாக மாற்றினார்கள். அட்டகாசமாக விளையாடி இலங்கை அணியின் பந்துவீச்சைத் திணறடித்தார்கள். விரைவாக ரன்கள் சேர்த்து 145 பந்துகளில் முதலில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். தேநீர் இடைவேளைக்கு முன்பு, 147 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் சதமடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் கண்ணில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தார் பர்ன்ஸ். 

பர்ன்ஸ் - ஹெட் ஆகிய இருவரும் 296 பந்துகளில் 200 ரன்கள் கூட்டணி அமைத்த பிறகு ஹெட்டும் சதமடித்து அசத்தினார். அவருக்குச் சதமடிக்க 155 பந்துகள் தேவைப்பட்டன. இருவரும் இணைந்து பிறகு 4-வது விக்கெட்டுக்கு 382 பந்துகளில் 300 ரன்கள் சேர்த்து இலங்கை அணியைக் கதிகலங்க வைத்தார்கள். எனினும் இருவருமே இரட்டைச் சதங்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 161 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹெட். பர்ன்ஸ் - ஹெட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 308 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்குப் பெரிய பலத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. இன்று, நான்கு கேட்சுகளும் ஒரு ரன் அவுட்டையும் தவறவிட்டதால் இலங்கை அணிக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 87 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ பர்ன்ஸ் 172 ரன்களுடனும் பேட்டர்சன் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com