/

சாஹல் அற்புதமான பந்துவீச்சு: மெல்போர்னில் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி!

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டுள்ளது... 

News image
Updated On :18 ஜனவரி 2019, 5:27 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. 71 ஆண்டுகளில் முதன்முறையாக தொடரை கைப்பற்றியது. ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய, ஆசிய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றார். இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராயுடு, சிராஜ், குல்தீப் ஆகியோருக்குப் பதிலாக ஜாதவ், விஜய் சங்கர், சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார்கள். கேரி 5 ரன்களிலும் ஃபிஞ்ச் 14 ரன்களிலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கவாஜாவும் மார்ஷும் அணியின் ஸ்கோரை 100 ரன்கள் வரை கொண்டுசென்றார்கள். அதுவரை பந்துவீசாமல் இருந்த சாஹலைப் பந்துவீச அழைத்தார் கோலி. முதல் ஓவரிலேயே மார்ஷை 39 ரன்களிலும் கவாஜாவை 34 ரன்களிலும் வீழ்த்தினார் சாஹல். இதையடுத்து அற்புதமான லெக் ஸ்பின் பந்துவீச்சால் 10 ரன்களில் ஸ்டாய்னிஸை வீழ்த்தினார் சாஹல். 

ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்காம்ப் 18, மேக்ஸ்வெல் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.