எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது ஷமி.

Updated On :24 ஜனவரி 2019, 1:12 am IST


நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களில் அந்த அணி சுருண்டது.
இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறையில் 49 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தனது இன்னிங்ஸை ஆடிய இந்தியா, 34.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்துக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டி, 3 டி20 ஆட்டங்களில் விளையாட இந்தியா அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் ஆட்டம் நேப்பியரில் இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கியது.
முதலில் விளையாடிய நியூஸிலாந்து தொடக்கம் முதலே தடுமாறி வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மார்டின் கப்டில் (5 ரன்), காலின் மன்றோ (8 ரன்) ஆகியோரை முகமது ஷமி பெவிலியனுக்கு அனுப்பினார்.
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
14.3ஆவது ஓவரில் சஹல் வீசிய பந்தில் கேட்ச் ஆகி 41 பந்துகளில் 24 ரன்களுடன் நடையைக் கட்டினார் ராஸ் டெய்லர்.
வில்லியம்சன் அரை சதம்: 
அவரை தொடர்ந்து களம் இறங்கிய விக்கெட் கீப்பர் டாம் லாதம் (11 ரன்), நிகோலஸ் (12 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மிச்செல் சாண்ட்னர் தோள் கொடுக்க 25.5ஆவது ஓவரில் ஒரு நாள் போட்டியில் தனது 36ஆவது அரை சதத்தைப் பதிவு செய்தார் வில்லியம்சன். 
எனினும், அடுத்த சில ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் சாண்ட்னர் (14 ரன்) வெளியேறினார்.
அணி விக்கெட்டுகளை இழந்து ரன்களை குவிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த வேளையில், குல்தீப் யாதவ் சுழலில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் வில்லியம்சன். அவர், 81 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார். அதிகபட்சமாக ரன்களை எடுத்து அணியை மோசமான நிலையிலிருந்து மீட்டவரும் இவரே. 
குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோரின் பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 38 ஓவர்களில் 157 ரன்களை நியூஸிலாந்து எடுத்தது.
இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், சஹல் ஆகியோர் தலா 10 ஓவர்களை வீசினர். குல்தீப் 4 விக்கெட்டுகளையும், சஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முகமது ஷமி 6 ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், கேதார் ஜாதவ் 3 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டையும் எடுத்தார்.
சூரிய வெளிச்சத்தால் தடங்கல்: எளிய இலக்குடன் களம் கண்டது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித்தும், தவணும் நிதானமாக தொடங்கினர்.
ரன்குவிப்பில் ஈடுபடுவார் என்று எண்ணிய ரோஹித், 9.2ஆவது ஓவரில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் கப்டிலிடம் கேட்ச் ஆனார்.
பின்னர், கேப்டன் கோலி களத்தில் இறங்கினார். தவணும், கோலியும் ரன்களைக் குவிக்கும் பணியை முன்னெடுக்கும் வேளையில், இயற்கை தடையை ஏற்படுத்தியது.
சூரிய வெளிச்சம் நேரடியாக இந்திய வீரர்களின் கண்களில் பட்டதால், பந்தை எதிர்கொள்ள முடியாமல் வீரர்கள் சிரமமடைந்தனர். பின்னர், நடுவரிடம் வீரர்கள் முறையிட்டனர்.
எனவே, அரை மணி நேரம் வரை விளையாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடுவர்கள் குழு முடிவெடுத்தது. சூரிய வெளிச்சத்தை கருத்தில் கொண்டு 49 ஓவர்களாக குறைக்கப்பட்டு, 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தவண் 26ஆவது அரை சதம்: 
நியூஸிலாந்து பந்துவீச்சை சிறப்பாக கோலியும், தவணும் எதிர்கொண்டு அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். 22.5 ஆவது ஓவரில் தவண் 26ஆவது அரை சதத்தைப் பதிவு செய்தார்.
28.4ஆவது ஓவரில் ஃபெர்குசன் பந்துவீச்சில் லாதமிடம் கேட்ச் ஆனார் கோலி. 
அப்போது, அவர் 59 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். அம்பதி ராயுடுவும், தவணும் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

தவண், ஷமி சாதனை
ஒரு நாள் ஆட்டத்தில் குறைந்த இன்னிங்ஸில் (118) 5,000 ரன்களை அதிவேகமாக கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை தவண் படைத்தார்.
முன்னாள் கேப்டன் கங்குலி 126 இன்னிங்ஸில் 5,000 ரன்களை கடந்தவர் ஆவார். இந்தப் பட்டியலில் விவியன் ரிச்சர்ட்ஸ் (114 இன்னிங்ஸ்), கோலி (114 இன்னிங்ஸ்),
ஹசீம் ஆம்லா (101) ஆகியோர் உள்ளனர். ஒருநாள் ஆட்டத்தில் அதிவேகமாக 5,000 ரன்களை (118 இன்னிங்ஸில்) கடந்த இடது கை பேட்ஸ்மேன் பிரையன் லாராவின் சாதனையையும் தவண் சமன் செய்தார்.

ஆட்டநாயகன் ஷமி
மார்டின் கப்டிலை போல்ட்ஆக்கியபோது 100ஆவது விக்கெட்டை கைப்பற்றினார் ஷமி. 56 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி இந்த சாதனையை புரிந்ததன் மூலம் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றார். ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இர்ஃபான் பதான் (59 ஒரு நாள் ஆட்டங்களிலும்), ஜாகீர் கான் (65), அகர்கர் (67) 100 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.