ரசிப்புக்கும், உற்சாகத்துக்கும் வயது தடையல்ல! உலக கிரிக்கெட் கொண்டாடிய மூத்த ரசிகை!

 மைதானத்தில் அவரின் உற்சாகம் சமூக வலைதளங்கள் முழுவதும் தொற்றிக்கொண்டது என்றால் அது மிகையல்ல.  
ரசிப்புக்கும், உற்சாகத்துக்கும் வயது தடையல்ல! உலக கிரிக்கெட் கொண்டாடிய மூத்த ரசிகை!

2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் செவ்வாய்கிழமை மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

இந்த ஆட்டத்தின் இடையே சிறப்பு ரசிகர் ஒருவர் மிகவும் பிரபலமானார். மைதானத்திலேயே மிக மூத்த ரசிகரான அவரை இந்திய கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா உட்பட அனைவரும் கொண்டாடினர்.

போட்டி முழுவதும் மிக உற்சாகமாக காணப்பட்ட அந்த சிறப்பு ரசிகரின் பெயர் சாருலதா படேல், வயது 87. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அந்த பாட்டிக்கு கிரிக்கெட் மீது கொள்ளைப் பிரியமாம். 

நான் பிறந்தது டான்ஸானியாவில். ஆனால், இந்தியா தான் எனது பூர்வீகம். எனவே எப்போதும் எனது தாய்நாட்டுக்கு ஆதரவாக இருப்பேன். 1983-ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது நேரில் கண்டு ரசித்தேன். இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடும்போது எல்லாம் தவறாமல் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். விநாயகரின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு, அதேபோன்று இந்திய அணியின் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்திய வீரர்களுக்கு எனது ஆசிர்வாதங்கள் என்றார்.

பணி ஓய்வு பெற்றதில் இருந்து கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசித்து வருவதாகவும், இந்தப் போட்டிக்குள்ளாக தன்னை 5 பேர் பேட்டி கண்டதாகவும், தனக்கு மிகவும் கூச்ச சுபாவம் எனவும் சற்றும் உற்சாகம் குறையாமல் நகைச்சுவையாக பதிலளித்தார். மைதானத்தில் அவரின் உற்சாகம் சமூக வலைதளங்கள் முழுவதும் தொற்றிக்கொண்டது என்றால் அது மிகையல்ல. 

இந்நிலையில், மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோரும் அந்தப் பாட்டியின் ரசிகர்களாயினர். மேலும் போட்டி முடிந்ததும் அவரிடம் சென்று ஆசி பெற்றனர். 

இந்திய ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், குறிப்பாக சாருலதா படேல் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த வயதிலும் இப்படியொரு உற்சாகமான, உணர்வுப்பூர்வமான ரசிகரை நான் கண்டதில்லை. வயது என்பது வெறும் எண் தான், உற்சாகத்துக்கு அது தடையல்ல. அவரின் ஆசியுடன் அடுத்தகட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

மைதானத்தின் காட்சிகளை கேமராக்கள் சுட்டுக்கொண்டிருந்தபோது நமது முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தான் முதலில் இவரது உற்சாகத்தை அடையாளம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com