உணவு இடைவேளைக்குப் பிறகு, 91 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் தென் ஆப்பிரிக்க கேப்டன். மிக அருமையாகச் சென்றுகொண்டிருந்த இந்தக் கூட்டணியை உடைத்தார் அஸ்வின். தவறான ஷாட்டினால் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து 55 ரன்களில் வெளியேறினார் டு பிளெஸ்ஸிஸ். இதன்பிறகு அஸ்வின் பந்தில் சிக்ஸர் அடித்து, 175 பந்துகளில் அருமையான சதத்தைப் பூர்த்தி செய்தார் எல்கர். இவருடைய பேட்டிங்கும் மன உறுதியும் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்த டெஸ்டில் புதிய வெளிச்சத்தை அளித்துள்ளது. 2016-ல் மொயீன் அலி இந்தியாவில் சதமடித்தார். அதன்பிறகு அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சைச் சமாளித்து சதமடித்த இடக்கை பேட்ஸ்மேன், எல்கர் மட்டுமே. எல்கர் பெரும்பாலான ரன்களை லெக் சைடில் எடுத்து இந்திய அணியின் பந்துவீச்சுத் திட்டத்தை முறியடித்தார்.