திட்டமிட்டு ஆடியதால் வெற்றி: கேப்டன் குயிண்டன் டி காக்

இந்திய அணியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, நாங்கள் திட்டமிட்டபடி ஆடியதால் வெற்றி பெற்றோம் என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் குயிண்டன் டி காக் கூறியுள்ளார்.
கோப்பையுடன் கோலி மற்றும் டி காக்.
கோப்பையுடன் கோலி மற்றும் டி காக்.


இந்திய அணியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, நாங்கள் திட்டமிட்டபடி ஆடியதால் வெற்றி பெற்றோம் என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் குயிண்டன் டி காக் கூறியுள்ளார்.
பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி டி20 ஆட்டத்தில் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்கா.
கேப்டன் டிகாக் அபாரமாக ஆடி 79 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.  இரு அணிகளும் பேடிஎம் கோப்பையை சமமாக பகிர்ந்து கொண்டன.
இதுதொடர்பாக டி காக் கூறியதாவது: ஆட்டத்தின் தொடக்கம் முதலே நாங்கள் திட்டமிட்டு ஆடினோம். இந்திய அணியின் ரன் குவிப்பை எங்கள் பந்துவீச்சாளர் பியூரன் ஹென்ட்ரிக்ஸ், போர்ட்யுன் கட்டுப்படுத்தினர். பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. முந்தைய ஆட்டத்தில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இதில் ஆடினோம். இந்திய பவுலர்கள் முதல் 4 ஓவர்களில் கடுமையாக அழுத்தம் தந்தனர். பந்தும் ஸ்விங் ஆனதால், ரன்களை எடுக்க முடியவில்லை. பின்னர் நிலை கொண்ட பின் தான் ரன்களை எடுத்தோம். டெஸ்ட் தொடரிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்.
எதிரணிக்கு எங்களை இருப்பை உணர்த்த வேண்டும் என நினைத்தோம். வீரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும் வகையில் வெற்றி தானாகவே வந்து சேரும் என்றார் டி காக்.
இந்திய கேப்டன் விராட் கோலி:  டி20 உலகக் கோப்பைக்கு முன்பு அணியில் நிலவும் குறைகளை சரி செய்ய இது வாய்ப்பாகும். தென்னாப்பிரிக்க அணி அபாரமாக பந்துவீசியது. பிட்சும் அவர்களுக்கு ஒத்துழைத்தது. டி20 ஆட்டத்தில் சேஸிங் செய்வது எளிதானது. ஒரு இணை சேர்ந்து 50 ரன்களை குவித்தாலும், எதிரணி வெற்றியை பறிக்கலாம். வீரர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய வீரர்கள் தற்போது வாய்ப்பு பெறுகின்றனர். இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளதால், அவர்கள் நிலைபெற மேலும் சில காலம் ஆகும். பெரிய போட்டிக்கும் செல்லும் போது சிறந்த இணையுடன் செல்ல வேண்டும். பெங்களூரு மைதானத்தில் கடந்த 6 டி20 ஆட்டங்களில் முதலில் எந்த அணியும் பேட்டிங்கை தேர்வு செய்யவில்லை.
நமது அணி வலிமை பெற நான் பேட்டிங்கை தேர்வு செய்தேன். பவுலர்கள் மீது குறை கூற முடியாது. குறைந்த ஸ்கோரை அவர்களால் தற்காக்க இயலவில்லை. பொறுமையுடன் செயல்பட்டு, உலகக் கோப்பைக்கு சரியான அணியை உருவாக்க வேண்டும், அதே நேரம் எதிரணிகளையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றார் கோலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com