மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பும் அம்பத்தி ராயுடு!
By Raghavendran | Published On : 24th August 2019 01:01 PM | Last Updated : 24th August 2019 03:19 PM | அ+அ அ- |

மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புவதாக சமீபத்தில் ஓய்வுபெற்ற அம்பத்தி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் போட்டித் தொடர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு (33) பேசியதாவது:
உலகக் கோப்பைத் தொடருக்காக கடந்த 5 ஆண்டுகளாக கடுமையாகப் பயிற்சி செய்தேன். எனவே அதில் இடம்பெறாததும், இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதும் எனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. நாம் கடுமையாக உழைத்து அது கிடைக்கவில்லை என்றால், அதிலிருந்து விலகுவது தான் சிறந்த முடிவாக இருக்கும். எனவே, நானும் நல்ல மனநிலையில் தான் ஓய்வு முடிவை அறிவித்தேன்.
ஆனால், அதுகுறித்து சில காலம் யோசித்தேன். தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளது. ஆகவே அடுத்து வரவுள்ள ஐபிஎல் தொடரில் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளேன்.
நான் கிரிக்கெட் விளையாடி சில காலம் ஆனதால், எனது உடல்திறன் மற்றும் ஆட்டத்திறன் சரியாக இல்லை. எனவே மீண்டும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். தற்போதைக்கு இதில் தான் எனது முழு கவனமும் உள்ளது. விரைவில் முழுநேர கிரிக்கெட் வீரராக மீண்டும் உருவெடுப்பேன். ஏனென்றால் கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு 47.05 சராசரியுடன் 1,694 ரன்கள் குவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...