கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து தில்லி அணிக்கு மாறினார் ஆர். அஸ்வின்: இணை உரிமையாளர் பேட்டி!

அஸ்வின் விவகாரம் குறித்து பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து தில்லி அணிக்கு மாறினார் ஆர். அஸ்வின்: இணை உரிமையாளர் பேட்டி!

கடந்த இரு வருடங்களாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார் அஸ்வின். அவர் கேப்டனாக இருந்த 28 ஆட்டங்களில் பஞ்சாப் அணி 12-ல் வெற்றியும் 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. கடந்த வருடம் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடமும் இந்த வருடம் 6-ம் இடமும் பிடித்தது. இரண்டு வருடங்களிலும் கடைசிக்கட்டத்தில் மோசமாக விளையாடியதால் பிளேஆஃப்-புக்கு அந்த அணியால் தகுதி பெற முடியாமல் போனது. 

இதனால் இந்த வருடம் புது அணி, புதிய பயிற்சியாளர்கள், புது கேப்டனுடன் களமிறங்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் முடிவெடுத்தார்கள். இதன் அடிப்படையில் அஸ்வினை வேறொரு அணிக்கு விட்டுக்கொடுக்கவும் முடிவெடுத்துள்ளார்கள். மைக் ஹஸ்ஸன் தலைமையிலான பயிற்சியாளர்களையும் நீக்கிவிட்டார்கள். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே சமீபத்தில் நியமிக்கப்பட்டார். சுனில் ஜோஷி துணை பயிற்சியாளராகவும், ஜான் ரோட்ஸ் பீல்டிங் பயிற்சியாளராகவும், ஆஸி. முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெயில் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

தில்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அஸ்வினைத் தங்கள் அணிக்குத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி வெல்லவுள்ளது என கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின. 2018 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. தற்போது, அதே தொகைக்கு அஸ்வின், தில்லி அணிக்குத் தேர்வாகியுள்ளார். 139 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின், 125 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 6.79.

கும்ப்ளே பயிற்சியாளரான பிறகு, அஸ்வினைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா திடீரெனக் கூறினார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் வாடியா கூறியதாவது: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் அஸ்வின் குறித்த தன்னுடைய சமீபத்திய முடிவை மறுபரீலனை செய்துள்ளது. அஸ்வின், பஞ்சாப் அணியின் முக்கியமான வீரர் என்பதை உணர்ந்துள்ளோம். அஸ்வினை அணி மாற்றுவதற்காக தில்லி கேபிடல்ஸ் அணியிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால் அது இறுதி முடிவை எட்டவில்லை. கடந்த இரு வருடங்களாகப் போட்டியின் பின்பாதியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. புதிய பயிற்சியாளரான அனில் கும்ப்ளே, பஞ்சாப் அணியில் நிதானத்தைக் கொண்டு வருவார். அவருடனான மூன்று வருட ஒப்பந்தத்தைத் தாண்டியும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் என்றார். 

இந்நிலையில் பஞ்சாப்பின் முடிவில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அஸ்வினை அதே விலைக்கு தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் இந்த மாற்றத்துக்காக பஞ்சாப் அணிக்கும் ஒரு தொகையையும் தில்லி அணி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.     

அஸ்வினுக்குப் பதிலாக கர்நாடக சுழற்பந்துவீச்சாளர் ஜே. சுஜித்தைத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. அவரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. மேலும் தில்லி அணியில் உள்ள நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்டையும் கோரியது பஞ்சாப் அணி. கடந்த வருடம் ரூ. 2.20 கோடிக்கு அவரைத் தேர்வு செய்தது தில்லி அணி. மீதமுள்ள ரூ. 5.20 கோடியை ரொக்கமாக பஞ்சாப் அணிக்குத் தருவதாகவும் பேசப்பட்டது. எனினும் பஞ்சாப் அணிக்கு மாற போல்ட் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் இந்த பரிமாற்றத்தில் போல்ட்டை இணைக்காமல் சுஜித்தை மட்டும் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. 

அஸ்வின் தில்லி அணிக்கு மாறியுள்ளதால் அந்த அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. ராகுல் டெவாடியா, அமித் மிஸ்ரா, சந்தீப் லமிசானே, ஜலஜ் சக்‌ஷேனா, அக்‌ஷர் படேல் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் தில்லி அணியில் ஏற்கெனவே உள்ளார்கள். இதுபோன்ற வீரர்களின் பரிமாற்றத்தை ஐபிஎல் அணிகள் நவம்பர் 14 வரை மேற்கொள்ளலாம். 

இந்நிலையில் அஸ்வின் விவகாரம் குறித்து பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்களும் அஸ்வினும் பிரிவது என்கிற முடிவை எடுத்துள்ளோம். இரு தரப்புக்கும் பலனளிக்கக் கூடிய விதத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அஸ்வினுக்கும் எங்களுக்கும் நல்ல தொகை கிடைக்கவேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் அணியிலிருந்து தில்லி அணிக்கு அஸ்வின் மாறியது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com