ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல்: வீரர்களுக்குச் சம்பளம் கிடைக்குமா?
வழக்கமாக ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு வீரர்களுக்கு ஒரு பகுதி சம்பளம் அளிக்கப்படும்...


இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 11,500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் மோடி கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தாா். பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நோய்த்தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றவா்களுக்கு எளிதில் பரவும் என்பதால், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த தேசிய ஊரடங்கு சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
இதனால் தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர் மோடி. கரோனா தொற்று பரவலின் தீவிரத்தை அறிந்து, ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டி முதலில் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக எட்டு ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. செவ்வாய் அன்று கங்குலி உள்ளிட்ட பிசிசிஐ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டு பிறகு ஐபிஎல் அணி உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் அணிகளுக்கு நிகராக வீரர்களும் அதிகப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். வழக்கமாக ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு வீரர்களுக்கு ஒரு பகுதி சம்பளம் அளிக்கப்படும். போட்டி முடிந்த பிறகு மீதமுள்ள தொகை வழங்கப்படும். 2020 ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் 62 வீரர்களை எட்டு அணிகளும் தேர்வு செய்தன. இந்நிலையில் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வீரர்களுக்கு எந்தத் தொகையும் ஐபிஎல் அணிகள் அளிக்க வேண்டியதில்லை. போட்டி தொடங்குவது உறுதியான பிறகுதான் வீரர்களுக்கு அணிகளிடமிருந்து பணம் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...