
பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியை 108 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்துள்ளது இந்தியன்ஸ் அணி.
இந்தியன்ஸ் - ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகள் மோதும் பகலிரவு பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி இரு மூன்று நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது.
இன்று தொடங்கிய 2-வது பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற ரஹானே தலைமையிலான இந்தியன்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 40 ரன்களிலும் மயங்க் அகர்வால் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 58 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த ஷுப்மன் கில், கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு விளையாடிய இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்கள். எனினும் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா - சிராஜ் ஜோடி 71 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இந்த ஆட்டத்தில் தனது அதிக முதல்தர ரன்களை எடுத்தார் பும்ரா. 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிராஜ் 22 ரன்கள் எடுத்தார்.
இந்தியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 48.3 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆஸி. அணித் தரப்பில் அபாட், ஜேக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணியின் இன்னிங்ஸில் இந்தியன்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசினார்கள். ஜோ பர்ன்ஸை டக் அவுட் ஆக்கினார் பும்ரா. பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. ஷமியும் சைனியும் ஆஸ்திரேலிய ஏ அணியின் பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்கள். கேப்டன் அலெக்ஸ் கேரி மட்டும் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 32.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷமி, சைனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பும்ரா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.