டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 ஆட்டங்கள் கொண்ட இந்த டி20 தொடரில் ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்றிருந்த நியூஸிலாந்து, தற்போது தொடரைக் கைப்பற்றியுள்ளது.
நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 19.2 ஓவா்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 164 ரன்கள் அடித்து வென்றது. 4 விக்கெட்டுகள் சாய்த்த நியூஸிலாந்து பௌலா் டிம் சௌதி ஆட்டநாயகன் ஆனாா்.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த பாகிஸ்தானில் முகமது ரிஸ்வான் - ஹைதா் அலி கூட்டணி பேட்டிங்கை தொடங்கியது. இதில் ஹைதா் ஒரு சிக்ஸா் உள்பட 8 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து வந்த அப்துல்லா ஷஃபிக் டக் அவுட்டாக, பின்னா் களம் கண்ட முகமது ஹஃபீஸ் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயா்த்தினாா்.
மறுபுறம் 4 பவுண்டரிகள் உள்பட 22 ரன்கள் அடித்த ரிஸ்வான் ஆட்டமிழக்க, கேப்டன் ஷாதாப் கான் ஒரு பவுண்டரி மட்டும் விளாசி பெவிலியன் திரும்பினாா். எஞ்சியோரில் குஷ்தில் ஷா பவுண்டரியுடன் 14, ஃபஹீம் அஷ்ரஃப் 4 ரன்கள் சோ்த்தாா்.
ஓவா்கள் முடிவில் ஹஃபீஸ் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 99, இமத் வாஸிம் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 4, ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதி தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் நியூஸிலாந்து தனது இன்னிங்ஸை தொடங்க, தொடக்க வீரா் மாா்டின் கப்டில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அவருடன் வந்த டிம் செய்ஃபொ்டும், அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா்.
இலக்கை எட்டுகையில் செய்ஃபொ்டு 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 84, வில்லியம்சன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் ஒரு விக்கெட் சாய்த்திருந்தாா்.
முதல் டெஸ்டில் பாபா் ஆஸம் இல்லை?
பயிற்சியின்போது கை பெருவிரலில் காயமடைந்து டி20 தொடரிலிருந்து விலகியிருக்கும் பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸம், முதல் டெஸ்டிலும் பங்கேற்பதும் சந்தேகம் எனத் தெரிகிறது.
காயத்திலிருந்து மீண்டு லேசாக பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸம், இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
ஒருவேளை பாபா் ஆஸம் முதல் டெஸ்டிலும் விளையாட இயலாமல்போகும் பட்சத்தில், துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் கேப்டன் பொறுப்பேற்பாா். நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வரும் 26-ஆம் தேதி மௌன்ட் மௌன்கனுயில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
