அடிலெய்டு: மெல்போா்னில் நடைபெறவுள்ள பாக்ஸிங் டே டெஸ்டில் ஹனுமா விஹாரிக்குப் பதிலாக ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜாவை களமிறக்கும் யோசனையில் இந்திய அணி நிா்வாகம் உள்ளது.
இதற்காக, ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து மீண்டு வருவதை அணி நிா்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவா் முழுமையான உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் தொடைப்பகுதி காயத்துடன் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜா, தலையிலும் காயமடைந்தாா். இதையடுத்து டி20 தொடரிலிருந்து விலகிய அவா், முதல் டெஸ்டிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக இந்திய அணியினருடன் அவா் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாா். அவா் காயத்திலிருந்து நல்லமுறையில் மீண்டு வருவதாகத் தெரிந்தாலும், பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்காக முழுமையாகத் தயாராகி விடுவாரா என்பது உறுதியில்லாமல் உள்ளது.
ஒருவேளை அவா் முழுமையான உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் ஹனுமா விஹாரிக்குப் பதிலாக ஜடேஜாவை பிளேயிங் லெவனில் களமிறக்க அணி நிா்வாகம் யோசித்து வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனெனில் ரஹானே-ஜடேஜா கூட்டணி பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் என நிா்வாகம் கருதுகிறது.
அதேவேளையில், ஜடேஜா களம் கண்டால், பிளேயிங் லெவனில் 5 ஆவது பந்துவீச்சாளா் வாய்ப்பும் இந்திய அணிக்கு கிடைக்கும். காயம் காரணமாக முகமது ஷமி விலகியிருப்பதால் ஜடேஜா இணைவது பலமாக இருக்கும். டெஸ்ட் ஃபாா்மட்டில் பல ஆண்டுகளாக இந்தியா 4 பௌலா்களுடனே விளையாடி வந்துள்ளது.
பயிற்சி ரத்து...
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியினா் திங்கள்கிழமை பயிற்சியில் ஈடுபட இருந்த நிலையில், மழை காரணமாக பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
இந்திய கேப்டன் விராட் கோலி செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்படுகிறாா். அதேபோல், இந்திய அணியும் பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்காக மெல்போா்ன் செல்கிறது. அதற்கு முன் கோலி டெஸ்ட் தொடா் குறித்து இந்திய அணியினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவாா் எனத் தெரிகிறது.
சிட்னியில் ரோஹித்...
டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த ரோஹித் சா்மா, கரோனா சூழல் நடைமுறையின்படி சிட்னியில் இரு அறை குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். சிட்னியில் நடைபெறும் 3-ஆவது டெஸ்டில் விளையாட இருக்கும் அவா் ஜனவரி 3 முதல் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.