பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய ரஹானே படை: ஆஸ்திரேலியா 195, இந்தியா 36/1

ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி, முதல் நாள் முடிவில்...

News image
4 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா
Updated On :27 ஜனவரி 2024, 6:13 pm

DIN

ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி, முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. 

2-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்மித்தும் அதேபோல ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால் நெருக்கடியில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. மேத்யூ வேட் 30 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட்டை 38 ரன்களில் வீழ்த்தினார் பும்ரா. அறிமுக வீரர் சிராஜ், லபுசானேவை 48 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதனால் முதல் ஐந்து விக்கெட்டுகளை 134 ரன்களுக்குள் இழந்தது ஆஸ்திரேலிய அணி.

தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 52 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. 

அஸ்வின்

அஸ்வின்

55-வது ஓவரின் கடைசிப் பந்தை ஆஸி. பேட்ஸ்மேன் கிரீன் எதிர்கொண்டார். அப்போது ரன் எடுக்க முயன்றபோது உமேஷ் யாதவ், விக்கெட் கீப்பரிடம் த்ரோ வீசினார். மறுமுனையில் இருந்து ஓடிவந்த பெயின், நூலிழையில் ரன்னைப் பூர்த்தி செய்தது போலத் தெரிந்தது. ஆனால் ரீபிளேயில் பெயினின் பேட், கிரீஸின் கோட்டில் இருந்தது. இதனால் 3-ம் நடுவர் பால் வில்சன் அவுட் கொடுப்பார் என இந்திய அணியினரும் ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக நாட் அவுட் என அறிவித்தார் 3-ம் நடுவர். பெயில்ஸை ரிஷப் பந்த் நீக்கும்போது பெயினின் பேட், கோட்டைத் தாண்டவில்லை. கோட்டின் முனையில் இருந்தது. ஆனால், வேறொரு கோணத்தில் பெயினின் பேட், கோட்டைத் தாண்டிவிட்டதாகவும் அதனால் அவுட் இல்லை என்றும் முடிவெடுத்தார் 3-ம் நடுவர் பால் வில்சன்.

நடுவரின் இந்த முடிவு இந்திய அணியினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்தது. கேப்டன் ரஹானே, கள நடுவரிடம் இதுபற்றி விவாதித்தார். சமூகவலைத்தளங்களிலும் ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சும் ரஹானேவின் திட்டங்களும் அபாரமாக இருந்தன. 

60 பந்துகள் எதிர்கொண்டு 12 ரன்கள் எடுத்த கிரீன், சிராஜ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கேப்டன் டிம் பெயினை 13 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின். ஒரு பவுண்டரி அடித்த ஸ்டார்க், பும்ராவின் பவுன்சர் பந்தில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேறினார். 

பும்ரா தனது 16-வது ஓவரில் 16 ரன்கள் கொடுத்தாலும் 20 ரன்களில் லயனை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் 9 ரன்களில் கம்மின்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

இந்திய அணியின் இன்னிங்ஸில் ஸ்டார்க்கும் கம்மின்ஸும் அபாரமாகப் பந்துவீசி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார்கள். முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் மயங்க் அகர்வால். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ள இளம் வீரர் கில், ஆஸி. பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார். அவ்வப்போது அழகான பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். அவர் விரைவாக ரன்கள் எடுப்பது இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். கில் 38 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் புஜாரா 23 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 7 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளார்கள்.

இந்திய அணி முதல் நாள் முடிவில் 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.