ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்குத் தினமும் கரோனா பரிசோதனை: பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் கோரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்குத் தினமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று...
ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்குத் தினமும் கரோனா பரிசோதனை: பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் கோரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்குத் தினமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ முதலில் அறிவித்தது.

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தினமும் வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியின்போது முடிந்தவரை அதிகமாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முடிந்தால் தினமும். நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தால் தினமும் பரிசோதனை செய்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அதனால் பாதிப்பு ஒன்றும் நேராது. ஆடுகளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விதிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு அம்சங்களில் கடுமையாக நடந்துகொண்டால் ஐபிஎல் போட்டி சிறப்பாக நடைபெறும். மைதானத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையென்றால் அதனால் எங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை பிசிசிஐ ஈடு கட்ட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com