மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிராட் 500 விக்கெட்டுகள்: யுவ்ராஜ் சிங் பாராட்டு

பிராடைப் பற்றி நான் எப்போது எழுதினாலும் அவர் பந்தில் அடிக்கப்பட்ட ஆறு சிக்ஸர்களை மக்கள் நினைவூட்டுவார்கள் என்பது தெரியும்.

News image
Updated On :29 ஜூலை 2020, 8:20 am

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. இந்த டெஸ்ட் ஆட்டத்தின் மூலம் 500 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிராடை யுவ்ராஜ் சிங் பாராட்டியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் இருந்தது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெற்றது. 

3-வது டெஸ்டில் வெற்றி பெற மே.இ. தீவுகள் அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 3-ம் நாளின் முடிவில் 6 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் எடுத்தது. எதிர்பார்த்தது போலவே 4-ம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் கடைசி நாளில் மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் கடைசி நாளில் 37.1 ஓவர்களில் 129 ரன்களுக்குச் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இதனால் 3-வது டெஸ்டை 269 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றியது. 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த பிராட், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பிராடும் சேஸும் அவரவர் அணியின் தொடர் நாயகர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். 

பிராடின் சாதனைக்கு யுவ்ராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பிராடைப் பற்றி நான் எப்போது எழுதினாலும் அவர் பந்தில் அடிக்கப்பட்ட ஆறு சிக்ஸர்களை மக்கள் நினைவூட்டுவார்கள் என்பது தெரியும். 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த பிராடை அனைவரும் பாராட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். 500 விக்கெட்டுகளை எடுத்தது சாதாரண விஷயமில்லை. அதற்குக் கடுமையான உழைப்பும் முனைப்பும் அவசியம். பிராட், நீங்கள் ஒரு ஜாம்பவான். வாழ்த்துகள் என்று பாராட்டியுள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பிராட் பந்துவீச்சில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை அடித்தார் யுவ்ராஜ் சிங். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.