பேட்டிங்கிலும் அசத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்: விராட் கோலி சொல்லும் காரணம்

40 ரன்கள் முன்னிலை பெறுவது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அவர்களுடைய முயற்சியால்...
பேட்டிங்கிலும் அசத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்: விராட் கோலி சொல்லும் காரணம்

முதல் டெஸ்டில் பேட்டிங்கிலும் அசத்திய இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆட்டம் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அது பறிபோயுள்ளது. இதனால் இந்த ஆட்டத்துக்கான புள்ளியை இரு அணிகளும் சமமாக (4-4) பகிா்ந்துகொள்கின்றன.

209 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 4-ஆம் நாளான சனிக்கிழமை முடிவில் 14 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சா்மா 12, சேதேஷ்வா் புஜாரா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

புதன்கிழமை தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவா்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 64 ரன்கள் அடிக்க, இந்திய பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். பின்னா் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் மட்டும் 84 ரன்கள் சோ்க்க, இந்தியா 84.5 ஓவா்களில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து பௌலா்களில் ஆலி ராபின்சன் அபாரமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 85.5 ஓவா்களில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 109 ரன்கள் விளாசினாா். இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட் எடுத்தாா்.

இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திறமையாக பேட்டிங்கும் செய்து இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கினார்கள். ஒருகட்டத்தில் இந்திய அணி 205 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில்     குறைவான ரன்களே முன்னிலை பெறும் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால், ஜடேஜா, ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் களத்தில் வழக்கத்தை விடவும் அதிகமான பந்துகளைச் சந்தித்து இந்திய அணிக்கு முக்கியமான ரன்களைப் பெற்றுத் தந்தார்கள். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் முன்னிலை அடைந்தது. ஜடேஜா 56, ஷமி 13, பும்ரா 28, சிராஜ் 7 ரன்கள் எடுத்தார்கள். 

இதுபற்றி இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

மூன்று வாரங்கள் கடுமையாக உழைத்ததன் பலன் தான் இது. வலைப்பயிற்சியின்போது தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபட்டு, அணிக்குப் பங்களிப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். மூன்று பந்து வீச்சாளர்களிடமிருந்தும் 50 ரன்களுக்கும் கூடுதலாகக் கிடைத்தது என்பது கடினமான ஒன்றை அடைந்ததற்குச் சமம். 40 ரன்கள் முன்னிலை பெறுவது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அவர்களுடைய முயற்சியால் மட்டுமே 95 ரன்கள் முன்னிலை பெற்றோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com