சென்னை டெஸ்ட்: நான்கு மாற்றங்களுடன் 12 பேர் கொண்ட அணியை அறிவித்தது இங்கிலாந்து அணி

முதல் டெஸ்டில் விளையாடிய பட்லர், ஆண்டர்சன், ஆர்ச்சர், பெஸ் ஆகியோர் 2-ம் டெஸ்டில் இடம்பெறவில்லை.
சென்னை டெஸ்ட்:  நான்கு மாற்றங்களுடன் 12 பேர் கொண்ட அணியை அறிவித்தது இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டுக்கு 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்ட் ஆட்டங்கள், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் டெஸ்டை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. 2-வது டெஸ்ட் நாளை முதல் சென்னையில் தொடங்குகிறது. 

வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், சென்னை டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பிராட் விளையாடவுள்ளார். மேலும் முதல் டெஸ்டில் விளையாடிய பட்லர், தற்போது இங்கிலாந்துக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து 2-வது டெஸ்டில் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பராக பென் ஃபோக்ஸ் செயல்படவுள்ளார். கடைசி மூன்று டெஸ்டுகளிலும் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்டுக்கு 12  பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து அணி. முதல் டெஸ்டில் விளையாடிய பட்லர், ஆண்டர்சன், ஆர்ச்சர், பெஸ் ஆகியோர் 2-ம் டெஸ்டில் இடம்பெறவில்லை. பட்லர் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார். காயம் காரணமாக ஆர்ச்சரும் ஓய்வு காரணமாக ஆண்டர்சனும் 2-வது டெஸ்டில் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் பெஸ், முதல் டெஸ்டில் சுமாராகப் பந்துவீசியதால் நீக்கப்பட்டுள்ளார். இந்த நான்கு வீரர்களுக்குப் பதிலாக பென் ஃபோக்ஸ், மொயீன் அலி, பிராட், கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ஸ்டோன் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். பென் ஃபோக்ஸ், மொயீன் அலி, பிராட் ஆகிய மூவரும் 2-வது டெஸ்டில் கட்டாயம் இடம்பெறுவார்கள். ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரிலிருந்து ஒருவர் நாளை தேர்வு செய்யப்படவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com