27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜோ ரூட் 5 விக்கெட்டுகள்: 33 ரன்கள் முன்னிலையுடன் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில்...

News image
Updated On :25 பிப்ரவரி 2021, 4:19 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின் 2-வது நாளில் இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட்டாக ஆமதாபாத்தில் நேற்று தொடங்கியது. மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-வது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. முதலிரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், லாரன்ஸ், ஸ்டோன், மொயீன் அலிக்குப் பதிலாக ஆண்டர்சன், ஆர்ச்சர், பேர்ஸ்டோவ், கிராவ்லி ஆகியோரும் இந்திய அணியில் சிராஜ், குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார். 

முதல் நாளில் இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 57 ரன்களுடனும் ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். 

இந்திய அணி சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் முன்னிலை பெறும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்கள். ரஹானே, லீச் பந்துவீச்சில் 7 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். பிறகு 66 ரன்களில் விளையாடி வந்த ரோஹித் சர்மாவையும் வீழ்த்தினார் லீச். இதன்பிறகு பந்துவீச வந்த ஜோ ரூட், இந்திய அணியின் கீழ் நடுவரிசைக்குப் பெரும் சோதனையாக மாறினார்.

முதல் பந்திலேயே ரிஷப் பந்தை 1 ரன்னில் வெளியேற்றினார் ரூட். பேட்டிங் திறமைக்காகவும் அணிக்குத் தேர்வான வாஷிங்டன் சுந்தர், ரன் எதுவும் எடுக்காமல் ரூட் பந்தில் போல்ட் ஆனார். அதே ஓவரில் அக்‌ஷர் படேலும் ரூட் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது மூன்று ஓவர்கள் வீசியிருந்த ரூட், ரன் எதுவும் கொடுக்காமல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 

ஓரளவு கெளரவமான முன்னிலையைப் பெற்றுத் தருவார் என அஸ்வினை இந்திய ரசிகர்கள் நம்பினார்கள். அவர் 3 பவுண்டரிகள் அடித்து 17 ரன்களில் ரூட் பந்தில் வீழ்ந்தார். பும்ரா ஒரு ரன்னில் ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக அவர் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 8 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் திட்டங்களை முறியடித்துள்ளார் ரூட். 

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 53.2 ஓவர்களில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்தின் ரூட் 5, லீச் 4, ஆர்ச்சர் 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.