தேசிய கீதம் ஒலித்தபோது அழுதது ஏன்?: இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் உருக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அவர் எப்போதும் ஆசைப்படுவார்...
தேசிய கீதம் ஒலித்தபோது அழுதது ஏன்?: இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் உருக்கம்
Published on
Updated on
1 min read

3-வது டெஸ்ட் தொடங்குமுன்பு தேசிய கீதம் ஒலித்தபோது தான் அழுததற்கான காரணத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்ட் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணிகளின் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கண்ணீர் விட்டார். அவரால் அழுகையை அடக்க முடியாமல் போனது. இதனால் உருக்கமான ரசிகர்கள், சிராஜுக்கு ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு சிராஜ் கூறியதாவது:

தேசிய கீதம் ஒலித்தபோது எனது தந்தையை நினைத்துக் கொண்டேன். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அவர் எப்போதும் ஆசைப்படுவார். இன்று அவர் இருந்திருந்தால் நான் விளையாடுவதைப் பார்த்திருப்பார் என்றார்.

26 வயது சிராஜ் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு விளையாடி வருகிறார்.

சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் மரணமடைந்தார். அப்போது இந்திய அணியினருடன் ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com