மூன்று கேட்சுகளைத் தவறவிட்டது, நடுவரை விமர்சித்ததால் அபராதம்: வருத்தத்தில் ஆஸி. கேப்டன் டிம் பெயின்

மூன்று கேட்சுகளைத் தவறவிட்டதில் வருத்தமாக உள்ளேன். இதை விட மோசமான நாள் எதுவும் அமைந்ததில்லை.
மூன்று கேட்சுகளைத் தவறவிட்டது, நடுவரை விமர்சித்ததால் அபராதம்: வருத்தத்தில் ஆஸி. கேப்டன் டிம் பெயின்
Published on
Updated on
1 min read

கடைசி நாளில் மூன்று கேட்சுகளைத் தவறவிட்டது, நடுவரை விமர்சனம் செய்ததற்காக அபராதம் என சிட்னி டெஸ்ட் ஆஸி. கேப்டன் டிம் பெயினுக்கு எதிர்பார்த்தது போல அமையவில்லை. 

இந்திய அணியின் கடுமையான முயற்சியால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. 5-வது நாளில் ரிஷப் பந்த், புஜாரா, விஹாரி, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளித்துள்ளார்கள்.

சிட்னியில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் விளாச, இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 244 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா மட்டும் தலா 50 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. இந்திய அணிக்கு 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. இதனால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது.

விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும் அஸ்வின்  128 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்கள். கடைசி வரை விஹாரி, அஸ்வினின் விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்களால் எடுக்க முடியாமல் போனது. இருவரும் 259 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்கள். 

கடைசி நாளில் மூன்று கேட்சுகளைத் தவறவிட்டார் ஆஸி. கேப்டனும் விக்கெட் கீப்பருமான டிம் பெயின். மேலும் 3-ம் நாளன்று நடுவரின் முடிவை மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததற்காக அவருக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிட்னி டெஸ்ட் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் டிம் பெயின் கூறியதாவது:

நான் பயன்படுத்திய வார்த்தைகளால் தவறான முன்னுதாரணமாக இருந்துள்ளேன். என்னுடைய செயலுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளேன் நடுவரை அவமதிக்க வேண்டும் என்பது என் எண்ணம் கிடையாது. அந்த நேரத்தில் அவ்வாறு நடந்துகொண்டேன். நான் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஸ்டம்ப் மைக் செயலில் உள்ளது என எனக்குத் தெரியும். இதனைக் குழந்தைகள் பார்க்கிறார்கள். நான் நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும். 

என்னுடைய விக்கெட் கீப்பிங் திறமையில் எப்போதும் நான் பெருமை கொள்வேன். மூன்று கேட்சுகளைத் தவறவிட்டதில் வருத்தமாக உள்ளேன். இதை விட மோசமான நாள் எதுவும் அமைந்ததில்லை. மோசமான உணர்வுகளைத் தருகிறது. பந்துவீச்சாளர்களை ஏமாற்றிவிட்டேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com