இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் மைதானத்தில் காலியாக இருந்த ஓர் இருக்கை: காரணம் என்ன?

கூட்டம் நிரம்பியிருந்த பார்வையாளர்கள் பகுதியில் ஒரேயொரு காலி இருக்கை காணப்பட்டது....
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் மைதானத்தில் காலியாக இருந்த ஓர் இருக்கை: காரணம் என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 5 ஆட்டங்களைக் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்  நேற்று டிரென்ட் பிரிட்ஜில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

நாட்டிங்ஹாம் நகரில் நடைபெறும் இந்தப் போட்டி மழையால் தடைபடலாம் என வானிலை மையத்தால் கணிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கணிப்பு முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கட்டுப்படுத்தவில்லை.

இங்கிலாந்து அரசாங்கம் அனைத்து விதமான கரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. இதனால் டிரென்ட் பிரிட்ஜ் மைதானம் ஏறத்தாழ நிரம்பியிருந்தது. சொந்த நாட்டில் இங்கிலாந்து அணி ஆடும் டெஸ்ட் போட்டியை நேரில் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர். ஒரேயொரு நபரைத் தவிர.

டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கூட்டம் நிரம்பியிருந்த பார்வையாளர்கள் பகுதியில் ஒரேயொரு காலி இருக்கை காணப்பட்டது. அந்த காலி இருக்கை ஜான் கிளார்க் என்பவருக்காக அவரது நண்பர்கள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் ஜான் கிளார்க் அண்மையில் காலமாகியிருந்தார். 

தீவிர கிரிக்கெட் ரசிகரான ஜான் கிளார்க், கடந்த 40 ஆண்டு காலமாக  டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்காமல் இருந்தது இல்லை. கிரிக்கெட் போட்டியின் மீது ஜான் கிளார்க் கொண்டிருந்த அளவில்லா காதல் மற்றும் பங்களிப்பை நினைவுகூறும் வகையில், மறைந்த அவருக்காக ஒரு இருக்கையை முன்பதிவு செய்து கௌரவித்திருந்தனர். இதனால் தான் அந்த இருக்கை காலியாக இருந்தது. (இந்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆதரவாளர்களான பார்மி ஆர்மி (England's Barmy Army) தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.)

மைதானத்தின் பார்வையாளர்கள் பகுதியில் காலியாக இருந்த ஜான் கிளார்க்குக்கான காலி இருக்கையை டிவிட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கிரிக்கெட்டின் தீவிர ரசிகரும், 40 ஆண்டுகள் டிரென்ட் பிரிட்ஜில் போட்டிகளை பார்த்து ரசித்த தங்கள் நண்பனின் நினைவை, அவருக்காக முன்பதிவு செய்திருந்த காலி இருக்கை மூலம் நினைவு கூர்ந்த ஜான் கிளார்க்கின் நண்பர்களை உலகமே பாராட்டி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com