ஆஷஸ்: கரோனா விதிமுறை காரணமாக ஆஷஸ் டெஸ்டை இழந்த பெர்த் மைதானம்

அனைவரும் பெர்த்தில் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்வது சாத்தியமில்லை என்பதால்...
ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி

ஆஷஸ் தொடரில் 5-வது டெஸ்டை நடத்தும் வாய்ப்பை பெர்த் மைதானம் அதிகாரபூர்வமாக இழந்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்டுகளில் 136-ல் ஆஸ்திரேலியாவும் 108-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 91 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

5-வது டெஸ்ட், பெர்த் மைதானத்தில் ஜனவரி 14 அன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் பெர்த் நகர் அமைந்துள்ள மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்துக்குள் நுழைபவர்கள் கரோனா பாதுகாப்பு விதிமுறையைக் கடைப்பிடிக்கும் விதமாக 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 4-வது ஆஷஸ் டெஸ்ட், சிட்னியில் ஜனவரி 9 அன்று நிறைவுபெறுகிறது. இதனால் பெர்த் டெஸ்டில் பங்கேற்கும் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், தொலைக்காட்சி ஊழியர்கள் என அனைவரும் பெர்த்தில் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்வது சாத்தியமில்லை என்பதால் 5-வது ஆஷஸ் டெஸ்டை நடத்தும் வாய்ப்பை பெர்த் மைதானம் இழந்துள்ளது. இத்தகவலை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி அறிவித்துள்ளார். பெர்த்தின் ஆப்டஸ் புதிய மைதானத்தில் முதல் ஆஷஸ் டெஸ்டை நடத்த எல்லாவிதமான வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் அரசின் விதிமுறை காரணமாக வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 5-வது டெஸ்ட் எங்கு நடக்கும் என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com