ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது எப்படி?: விராட் கோலி வெளிப்படுத்தும் உண்மைகள்

ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு தேர்வுக்குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டார்கள்....
ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது எப்படி?: விராட் கோலி வெளிப்படுத்தும் உண்மைகள்

தெ.ஆ. தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்ட தகவல் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக விராட் கோலி கூறியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். டிசம்பர் 16 அன்று மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறது. 

மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித்துக்குப் பதிலாக ப்ரியங் பஞ்சால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

டெஸ்ட் தொடருக்கு அடுத்து விளையாடவுள்ள ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. தனது மகள் வாமிகாவின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குத் திரும்பவுள்ளதால் ஒருநாள் தொடரிலிருந்து விலகும் முடிவை கோலி எடுத்ததாகச் செய்திகள் வெளியானதால் சர்ச்சையும் குழப்பமும் ஏற்பட்டன. கோலி விலகல் தொடர்பான தகவல் வெளியான பிறகு, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவேண்டுமா, இந்திய அணி மீது அவருக்கு அக்கறை இல்லையா என ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினார்கள்.

கோலியின் மகள் வாமிகா, கடந்த வருடம் ஜனவரி 11 அன்று பிறந்தார். தெ.ஆ. டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட், ஜனவரி 11 அன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. தெ.ஆ. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறியதாவது:

டிசம்பர் 8 அன்று தேர்வுக்குழு கூடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு தேர்வுக்குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியது முதல் எவ்வித தகவலும் எனக்கு அளிக்கப்படவில்லை. தெ.ஆ. தொடருக்கான டெஸ்ட் அணி பற்றி தேர்வுக்குழுத் தலைவர் என்னிடம் விவாதித்தார். இருவரும் அணி பற்றிய விவரங்களை ஏற்றுக்கொண்டோம். அந்த தொலைபேசி அழைப்பு முடியும் முன்பு, ஒருநாள் கேப்டன் பதவியில் நான் இல்லை என்பதை ஐந்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்படியா நல்லது எனப் பதில் அளித்தேன். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது அதை நன்கு வரவேற்றார்கள். முற்போக்கான முடிவு எனப் பாராட்டப்பட்டது. டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என என்னிடம் யாரும் சொல்லவில்லை என்றார்.

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கோரிக்கை வைத்ததாக பிசிசிஐ தலைவரும் முன்னாள் வீரருமான செளரவ் கங்குலி கூறிய நிலையில் விராட் கோலி இவ்வாறு கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com