68 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து: ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 
68 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து: ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டையும் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்டையும்  ஆஸி. அணி எளிதாக வென்றது. ஆஷஸ் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. 3-வது டெஸ்ட், மெல்போர்னில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 65.1 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோ ரூட் 50 ரன்களும் பேர்ஸ்டோ 35 ரன்களும் எடுத்தார்கள். பேட் கம்மின்ஸ், லயன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 87.5 ஓவர்களில் 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மார்கஸ் ஹாரிஸ் 76 ரன்கள் எடுத்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் முன்னிலை பெற்றது. 

2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. 6 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 51 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஜோ ரூட் 12, ஸ்டோக்ஸ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் 3-ம் நாளில் இங்கிலாந்து அணி மேலும் மோசமாக விளையாடி 27.4 ஓவர்களில் 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ஜோ ரூட் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். ஆஸி. அணியின் அறிமுக வீரர் ஸ்காட் போலண்ட் 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது.

3-வது டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரையும் வென்றுள்ளது. இதனால் ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்துள்ளது.

இதுவரை நடைபெற்ற 72 ஆஷஸ் தொடர்களில் 34-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.

4-வது டெஸ்ட், சிட்னியில் ஜனவரி 5 அன்று தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com