இலங்கைக்கு எதிரான கடைசி டி20 ஆட்டம்: தமிழக வீரர் சாய் கிஷோர் விளையாடுவாரா?

சாய் கிஷோரின் திறமை இன்னும் பலருக்கும் தெரியாமல் உள்ளது.
இலங்கைக்கு எதிரான கடைசி டி20 ஆட்டம்: தமிழக வீரர் சாய் கிஷோர் விளையாடுவாரா?

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனில் உள்ளது. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இலங்கை 19.4 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் அடித்து வென்றது. இந்த ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் வீரா்களான ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதீஷ் ராணா, சேத்தன் சக்காரியா ஆகியோா் இந்திய அணியில் இடம்பிடித்து சா்வதேச டி20 போட்டியில் அறிமுகம் ஆகினா். கிருணால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு நெருக்கமான தொடா்பில் இருந்ததாக சில வீரா்கள் தனிமைப்படுத்தப்பட்டதால், புதிய வீரா்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

கடைசி டி20 ஆட்டம் இன்று கொழும்பில் நடைபெறுகிறது. மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பிடித்து இலங்கைக்குச் சென்ற தமிழக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால் இன்று நடைபெறும் கடைசி டி20 ஆட்டத்தில் சாய் கிஷோர் தேர்வாக வாய்ப்புண்டா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

24 வயது சாய் கிஷோர், சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி போட்டியில் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். இதனால் தமிழக அணி கோப்பையை வெல்ல பெரிதும் உதவினார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், சையத் முஷ்டாக் அலி போட்டியில் மிகக்குறைவான ரன்கள் கொடுத்து அசத்தினார். விளையாடிய எட்டு ஆட்டங்களிலும் அவருடைய பந்துவீச்சு தமிழக அணிக்குப் பெரிதும் உதவியது. முக்கியமாக பவர்பிளே ஓவர்களில் இவருடைய பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து அதிக ரன்களை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. சையத் முஷ்டாக் அலி இறுதிச்சுற்றில் விக்கெட்டுகள் எடுக்காமல் போனாலும் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 4.82. நாக் அவுட் ஆட்டங்களில் சாய் கிஷோரின் பந்துகளில் எதிரணி வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினார்கள். 

ஐபிஎல் போட்டியில் ஒரு வாய்ப்பும் கிடைக்காததால் சாய் கிஷோரின் திறமை இன்னும் பலருக்கும் தெரியாமல் உள்ளது. 2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த வருட சையத் முஷ்டாக் அலி போட்டியில் சாய் கிஷோர் தான் அதிக விக்கெட்டுகள் எடுத்திருந்தார். 12 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகள். எகானமி - 4.63. எனினும் கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சாய் கிஷோருக்கு ஒரு வாய்ப்பையும் தோனி வழங்கவில்லை. இத்தனைக்கும் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசியும் ஒரு வாய்ப்பும் சாய் கிஷோருக்குக் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து இரு வருடங்களாகத் தனது திறமையை நிரூபித்து வரும் சாய் கிஷோரைப் பற்றி இந்தியத் தேர்வுக்குழு அறிந்துள்ளதால் தான் தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். மேலும் பேட்டிங்கிலும் ஓரளவு ரன்கள் எடுத்து அணிக்கு உதவியாக இருப்பார். இடது கை பந்துவீச்சாளர் என்பதால் இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கவும் வாய்ப்புண்டு. 

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்கு முன்பு, இந்திய அணிக்கு சாய் கிஷோர் அறிமுகமாவாரா என்பது இன்று தெரிந்துவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com