2-வது ஒருநாள்: ராகுல் சதம், ரிஷப் பந்த் அதிரடியால் 336 ரன்கள் குவித்த இந்திய அணி

ரிஷப் பந்த், 40 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 77 ரன்களில்...
2-வது ஒருநாள்: ராகுல் சதம், ரிஷப் பந்த் அதிரடியால் 336 ரன்கள் குவித்த இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மீண்டும் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் காயத்தால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ள கேப்டன் மார்கனுக்குப் பதிலாக மலான் அணியில் இடம்பெற்றுள்ளார். லியம் லிவிங்ஸ்டோன் அறிமுகமாகியுள்ளார். மார்க் வுட்டுக்குப் பதிலாக ரீஸ் டாப்லி தேர்வாகியுள்ளார். பட்லர் அணிக்குத் தலைமை தாங்குகிறார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கியுள்ளார்.

ஷிகர் தவன் 4 ரன்களில் டாப்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5 பவுண்டரிகள் அடித்து நன்கு விளையாடி வந்த ரோஹித் சர்மா, 25 ரன்களில் சாம் கரண் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதன்பிறகு கோலியும் ராகுலும் அருமையான கூட்டணி அமைத்தார்கள்.

14-வது ஓவரில் இந்திய கேப்டன் விராட் கோலி, டாம் கரண் பந்தில் பவுண்டரி அடித்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3-ம் நிலை வீரராக 10,000 ரன்கள் எடுத்தார் கோலி. ரிக்கி பாண்டிங்கும் கோலியும் மட்டுமே 3-ம் நிலையில் 10,000 ஒருநாள் ரன்கள் எடுத்த வீரர்கள். 

விராட் கோலியும் ராகுலும் 119 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். 62 பந்துகளில் அரை சதமெடுத்தார் கோலி. இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு அரை சதங்கள் எடுத்துள்ளார். இன்றைக்காவது விராட் கோலி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 66 ரன்களில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 66 ரன்களில் வெளியேறினார் கோலி. 

கே.எல். ராகுல் 66 பந்துகளில் அரை சதமெடுத்தார். ரிஷப் பந்த் களமிறங்கிய பிறகு ஆட்டம் களைகட்டியது. வந்தவுடன் சிக்ஸரும் பவுண்டரிகளும் அடித்து இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 37-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு ராகுலும் ரிஷப் பந்தும் வானவேடிக்கை நடத்தினார்கள். டாம் கரண் வீசிய 42-வது ஓவரில் இருவரும் சேர்ந்து 22 ரன்கள் எடுத்தார்கள். 28 பந்துகளில் அரை சதமெடுத்து இங்கிலாந்து அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார் ரிஷப் பந்த்.

டி20 தொடரில் மோசமாக விளையாடிய கே.எல். ராகுல், 108 பந்துகளில் சதமெடுத்து அசத்தினார். இது அவருடைய 5-வது ஒருநாள் சதம். எனினும் 108 பந்துகளில் டாம் கரண் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். சாம் கரண் வீசிய 46-வது ஓவரில் ரிஷப் பந்தும் பாண்டியாவும் 21 ரன்கள் எடுத்தார்கள். விரைவாக சதமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த், 40 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 77 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். பாண்டியா 16 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 35 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி,  50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது. கிருனாள் பாண்டியா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com