டி20 உலகக் கோப்பை: பிரபல இங்கிலாந்து வீரர் விலகல்
By DIN | Published On : 09th November 2021 11:02 AM | Last Updated : 09th November 2021 11:04 AM | அ+அ அ- |

இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராய், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற இங்கிலாந்து அணி, 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில் கெண்டைக்கால் பின் தசையில் காயம் ஏற்பட்டதால் மிகுந்த சிரமத்துடன் ஓய்வறைக்குத் திரும்பினார். தற்போது காயம் காரணமாக அவரால் உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியதால் மனமுடைந்துள்ளேன். எனினும் அணியினருடன் தங்கி அவர்களுக்கு ஆதரவு அளிக்கப் போகிறேன். அடுத்த வருடத் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. அதற்குள் காயத்திலிருந்து குணமாகி விடுவேன் என்று ஜேசன் ராய் கூறியுள்ளார்.
ஜேசன் ராய் விலகியதையடுத்து ஜேம்ஸ் வின்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.