முகப்பு விளையாட்டு செய்திகள்
இந்தியா - நியூசி. 2-வது டி20: பனிப்பொழிவின் தாக்கம் எப்படி இருக்கும்?
By DIN | Published On : 19th November 2021 04:11 PM | Last Updated : 19th November 2021 04:11 PM | அ+அ அ- |

இந்திய அணி
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 ஆட்டம் இன்றிரவு நடைபெறுகிறது.
நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வென்றது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பனிப்பொழிவு காரணமாக 2-வதாகப் பந்துவீசிய அணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் இரவில் நடைபெறும் டி20 ஆட்டங்களில் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பந்துவீசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்நிலையில் ராஞ்சி டி20 ஆட்டத்திலும் பனிப்பொழிவு சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. இந்த ஆட்டம் பற்றி ஆடுகள வடிவமைப்பாளர் ஷ்யாம் பகதூர் சிங் ஒரு பேட்டியில் கூறியதாவது:
இரவு 7.30 மணி முதல் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். அதன் தாக்கத்தைக் குறைக்க எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்துவோம். ஆடுகளம் பேட்டிங்குக்குச் சாதகமாகவே இருக்கும். டி20 என்பது பொழுதுபோக்கு ஆட்டம். ரஞ்சி, டெஸ்டுக்கு அல்ல டி20 ஆட்டத்தின் அதிரடி ஆட்டத்தைப் பார்க்கவே ரசிகர்கள் வருகிறார்கள் என்றார்.