முகப்பு விளையாட்டு செய்திகள்
டி20 உலகக் கோப்பை அணியில் நடராஜன் இடம்பெறாதது ஏன்?: தேர்வுக்குழுத் தலைவர் விளக்கம்
By DIN | Published On : 09th September 2021 12:21 PM | Last Updated : 09th September 2021 03:23 PM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பெறாதது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரரான டி. நடராஜன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். 30 வயதான நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின்போதே முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குக் காயம் பெரிதானது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்குக் ஏப்ரல் மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை. எனினும் தற்போது முழு உடற்தகுதியடைந்துள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடவுள்ளார்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர்களான அஸ்வினும் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றார்கள். எனினும் நடராஜன் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதுபற்றி தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா விளக்கம் அளித்ததாவது:
இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஹார்திக் பாண்டியா இருக்க வேண்டும் எனத் தேர்வுக்குழுவினர் கருதினோம். நடராஜன் பற்றி நிச்சயமாக விவாதித்தோம். ஆனால் நீண்ட நாளாக எந்தவொரு கிரிக்கெட் ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. காயமடைந்த வீரர்களின் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார். அதனால்தான் நாங்கள் மூத்த பந்துவீச்சாளர்களையே தேர்வு செய்தோம் என்றார்.