80 ரன்களுக்குச் சுருண்ட வங்கதேசம்: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்க அணி

டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி.
80 ரன்களுக்குச் சுருண்ட வங்கதேசம்: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்க அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் 80 ரன்களுக்கு வங்கதேச அணி ஆட்டமிழந்தது. இதனால் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

தென்னாப்பிரிக்காவில் விளையாடிய ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேசம். இதையடுத்து தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டை 220 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி.

கேபெராவில் (போர்ட் எலிசபெத்) நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி, 453 ரன்கள் குவித்தது. ஆனால் வங்கதேச அணியால் 217 ரன்களே எடுக்க முடிந்தது. 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்க அணி. இதனால் வங்கதேச அணி வெற்றி பெற 413 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-ம் நாள் முடிவில் வங்கதேச அணி, 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று வங்கதேச பேட்டர்களால் தெ.ஆ. அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத காரணத்தால் 23.2 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி. இதனால் 2-வது டெஸ்டை 332 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது. 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை எடுத்த கேஷவ் மஹாராஜ் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த டெஸ்டில் 9 விக்கெட்டுகளும் டெஸ்ட் தொடரில் 16 விக்கெட்டுகளும் அவர் எடுத்துள்ளார்.

2 டெஸ்டுகளிலும் வங்கதேச அணியின் 2-வது இன்னிங்ஸில் தெ.ஆ. சுழற்பந்துவீச்சாளர்களான மஹாராஜும் ஹார்மரும் அனைத்து வங்கதேச விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது தென்னாப்பிரிக்க அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com