
மகளிர் செஸ் கிராண்ட் மாஸ்டர் பக்தி குல்கர்னிக்கு அரசு வேலை வழங்கப்படும் என கோவாவின் முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. கோவா முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றாா்.
கோவாவைச் சேர்ந்த மகளிர் செஸ் கிராண்ட்மாஸ்டர் பக்தி குல்கர்னி, சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றார். ஓபன் பிரிவில் இந்திய பி அணி வெண்கலம் வென்றது. மகளிர் பிரிவில் ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி, பக்தி குல்கா்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்ற இந்திய ஏ அணி வெண்கலம் வென்றது. கோவாவின் முதல் மகளிர் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைக் கொண்டவர் பக்தி குல்கர்னி.
இந்நிலையில் செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னிக்கு அரசு வேலை வழங்கப்படும் என கோவா அரசு அறிவித்துள்ளது. கோவா விளையாட்டு ஆணையத்தில் செஸ் நிபுணர் பணி அவருக்குக் கிடைக்கவுள்ளது. சென்னை செஸ் ஒலிம்பியாடில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக கோவா செஸ் சங்கத்தின் சார்பில் பக்தி குல்கர்னிக்குப் பாராட்டு விழா கோவாவில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கலந்துகொண்டார். விழாவில் அவர் கூறியதாவது:
அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமாக இருப்பவர் பக்தி குல்கர்னி. அவர் தன் திறமையை நிரூபித்துள்ளார். வருங்காலத்திலும் தொடர்ந்து நிரூபிப்பார். அவருக்கு எங்கள்டைய ஆதரவை அளிப்போம். பக்தி குல்கர்னிக்கு நிரந்தரப் பணியை கோவா அரசு வழங்கவுள்ளது. இந்தியாவுக்காகப் பதக்கங்களை வென்ற வீரர்கள் நிரந்தரப் பணிக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். கோவா விளையாட்டு ஆணையத்தில் செஸ் நிபுணராகப் பக்தி குல்கர்னி பணியமர்த்தப்படுவார் என்றார். மேலும் சென்னை செஸ் ஒலிம்பியாடில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக கோவா அரசு சார்பில் பக்தி குல்கர்னிக்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையும் விழாவில் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.