டிரா: சிக்ஸர் மழை பொழிந்து வெற்றிக்காகப் போராடிய தமிழக அணி!

ஜெகதீசன் 22 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் தமிழக அணியைக் கொண்டு சென்றார்.
ஜெகதீசன்
ஜெகதீசன்

தமிழகம் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் பரபரப்பான முறையில் டிரா ஆகியுள்ளது. 

தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 395 ரன்கள் எடுத்தது. கேப்டன் அகர்வால் 135 ரன்களும் மிகில் ஜெயிஸ்வால் ஆட்டமிழக்காமல் 137 ரன்களும் எடுத்தார்கள். சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளும் விக்னேஷ் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றது. 111.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 179, ஜெகதீசன் 116, பாபா அபரஜித் 115 ரன்கள் எடுத்தார்கள். 

ஹைதராபாத் அணி 2-வது இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தியாகராஜன் 69 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தமிழக அணிக்கு 11 ஓவர்களில் 144 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்கைச் சாத்தியமாக்கப் போராடினார்கள் தமிழக தொடக்க வீரர்களான ஜெகதீசனும் சாய் சுதர்சனும். சிக்ஸர் மழை பொழிந்தார்கள். 20 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சாய் சுதர்சன். ஜெகதீசன் 22 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் தமிழக அணியைக் கொண்டு சென்றார். எனினும் வெளிச்சமின்மை காரணமாக 7 ஓவர்களுடன் ஆட்டம் முடிவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தார்கள். இதனால் ஆட்டம் டிரா ஆனது. தமிழக வீரர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். தமிழக அணி 7 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் குவித்து பலத்த பாராட்டுகளைப் பெற்றது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற தமிழக அணி மூன்று புள்ளிகளைப் பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com