கடவுள் தந்த கோப்பை! இறுதிச்சுற்றில் சாதித்த ஆர்ஜென்டீனா!

இந்த உலகக் கோப்பையைக் கடவுள் எங்களுக்குத்  தருவார் என்பது முன்பே தெரியும்...
கொடி பறக்குது! ஆர்ஜென்டீனாவில் மறைந்த கால்பந்தாட்ட வீரர் மாரடோனா உருவத்துடன் பறக்க விடப்பட்டிருந்த வெற்றிக் கொடி...
கொடி பறக்குது! ஆர்ஜென்டீனாவில் மறைந்த கால்பந்தாட்ட வீரர் மாரடோனா உருவத்துடன் பறக்க விடப்பட்டிருந்த வெற்றிக் கொடி...

இனிதே நடந்து முடிந்திருக்கிறது 22-வது உலகக்கோப்பை கால்பந்தாட்டத் திருவிழா. 36 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோப்பையை வென்றிருக்கிறது ஆர்ஜென்டீனா.

1986-ம் ஆண்டு மாரடோனாவின் அபாரமான ஆட்டத்தால், ஆர்ஜென்டீனா உலகக் கோப்பையை வென்றபோது, மெஸ்ஸி பிறந்திருக்கவில்லை. இந்த நிலையில், 35 வயது மெஸ்சி, மாரடோனா காலத்துப் பொற்காலம் ஒன்றை மீண்டும் மலரச் செய்திருக்கிறார். நீண்டகாலமாக அவரை ஏமாற்றி வந்த கால்பந்து உலகக்கோப்பைக் கனவை இந்தமுறை நனவாக்கி இருக்கிறார். உலகக் கோப்பைப் போட்டிகளில் 3-வது முறையாக ஆர்ஜென்டீனாவை வெற்றிக் கோப்பையை ஏந்தச் செய்திருக்கிறார் மெஸ்ஸி.

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ் இடையில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில், முதல் 45 நிமிடங்களில், வரம் வாங்கி வந்தவர்களைப் போல ஆர்ஜென்டீனா வீரர்கள் ஆடத் தொடங்கினார்கள். அந்த அளவுக்கு விறுவிறுப்பான, அதிடியான ஆட்டம். ஆர்ஜென்டீனா வீரர் டி மரியா, ஆடுகளத்தின் இடதுபுறமாக, பிரான்ஸ் கோல்கம்பத்தை நோக்கி, ஒரு ராஜபாட்டையை அமைத்திருந்தார். அதன் வழியே தங்குத் தடையில்லாமல் ஆர்ஜென்டீனா பந்தைக் கடத்திப் போய்வர முடிந்தது. பிரான்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார் கிளியன் எம்பாப்பே இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவரை மட்டுப்படுத்தி கட்டுக்குள் வைத்திருந்தார்கள் ஆர்ஜென்டினாவின் இரு வீரர்கள்.

ஆட்டத்தின் முதல்பாதியில் 2-0 என ஆர்ஜென்டீனா முன்னிலை பெற்றது.  இரண்டாவது பாதி தொடங்கிய போது, 2 கோல்களை வாங்கியிருந்த பிரான்ஸ் அணி, கிட்டத்தட்ட சீறியெழுந்து பதில் தாக்குதலில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது ஏன் என்பது பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டேஸ்சாம்ப்புக்குப் புரிந்திருந்தது.

முதல் விஷயம், ஆர்ஜென்டீனா வீரர்கள் ஒரு முடிவோடு ஆடுகிறார்கள். இரண்டாவது, பிரான்ஸ் அணி 100 விழுக்காடு முழு வேகம், ஆட்டத்திறமையோடு இல்லை. பார்க்கலாம். ஆட்ட முடிவான 90 நிமிடங்கள் வரை ஆர்ஜென்டீனா இதே வேகத்தோடு ஆட முடியாது, அவர்களைக் களைப்படையும் வரை காத்திருப்போம், பிறகு வேலையைக் காட்டலாம் என எண்ணியிருப்பார்.

பிரான்ஸ் பயிற்சியாளர், ஆர்ஜென்டீனாவின் இளம் பயிற்சியாளர் லினல் ஸ்கலோனியை கவனித்தபடியே இருந்தார். 2 கோல்கள் முன்னணியில் இருக்கும் பெருமிதத்தில், ஸ்கலோனி இளமைத்துடிப்பு காரணமாக கண்டிப்பாக ஏதாவது தவறு செய்வார் என டேஸ்சாம்ப்பு எதிர்பார்த்திருந்தார். அவரது கணக்குத் தப்பவில்லை. 

64-வது நிமிடத்தில் அந்தத் தவறு நடந்தது. ஆடுகளத்தின் இடதுபுறமாக அனல் பறக்க வைத்துக் கொண்டிருந்த டி மரியாவை, 64-வது நிமிடத்தில் வெளியேற்றி, பதிலி ஆட்டக்காரரை அனுப்பினார் ஸ்கலோனி. அதுவரை தலைதூக்க முடியாமல் இருந்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் தலை இப்போது மெல்லத் தெரியத் தொடங்கியது. எம்பாப்பேவிடம் தன்னம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது. தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினார் எம்பாப்பே. பிரான்ஸ் பயிற்சியாளர் இன்னொரு வேலையையும் செய்தார். 

பிரான்ஸ் அணியின் ஓலிவியே கிரூத், உஸ்மன் டெம்பிளி ஆகிய இருவரும் முழு உடற்தகுதியோடு இல்லாமல், ஒப்புக்கு ஆடுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். 2 பேரையும் வெளியேற்றி பதிலி ஆட்டக்காரர்களை அனுப்பினார். 

டேஸ்சாம்ப்பு செய்த இன்னொரு அருமையான வேலை, இடது விங் பகுதியில் இருந்து எப்பாப்பேவை விடுவித்தது. இதன்பிறகு அலாவுதீன் பூதம் அற்புத விளக்கில் இருந்து அவ்வப்போது வெளிவரத் தொடங்கியது. பிரான்ஸ் அணிக்கு வரம் தர ஆரம்பித்தது.

2-0 என இருந்த ஆட்டம் 2-2 என மாறி, கூடுதல் நேரத்தில் 3-2 என ஆகி, பிறகு 3-3 என மாறி… போட்டி முழுவதும் பலப்பல திடுக்கிடும் திருப்பங்கள்.

ஆர்ஜென்டீனாவின் கோல்கீப்பர் மார்டினெஸ் மட்டும் மகத்தான நம்பிக்கையுடன் இருந்தார். ஆட்டம் பெனால்டி ஷூட்அவுட்டுக்குச் சென்றால் கோப்பை ஆர்ஜென்டீனாவுக்குத்தான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 
காரணம் உலகக் கோப்பைப் போட்டிகளில் 6 பெனால்டி ஷூட்அவுட்களில் 5 முறை வெற்றி பெற்ற நாடு ஆர்ஜென்டீனா. அதற்கென ஒரு பாரம்பரியம் உள்ளது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. பெனால்டி ஷூட்அவுட்டில் 4-2 என பிரான்ஸை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது ஆர்ஜென்டினா. அதற்கு காரணமாக இருந்தார் மார்டினெஸ்.

ஆர்ஜென்டீனா அணியின் பயிற்சியாளராக லினல் ஸ்கலோனி நியமிக்கப்பட்ட காலத்தில், அதை எதிர்த்து ஒரு கண்டனக்குரல் எழுந்தது. ‘என்ன? ஆர்ஜென்டீனா அணிக்கு இவர் பயிற்சியாளரா? சாலையில் டிராஃபிக் காவலராக இருக்கக் கூட லாயக்கில்லாதவர் ஸ்கலோனி. அவரைப் போய் ஆர்ஜென்டீனா அணியின் பயிற்சியாளராகப் போடுவதா?’ என்ற கண்டனக்குரல் அது.  இந்தக் கண்டனக்குரலை எழுப்பியவர் - மாரடோனா.  ஆனால், ‘டிராஃபிக் காவலராக இருக்கக் கூட லாயக்கில்லாத’ லினல் ஸ்கலோனிதான் ஆர்ஜென்டீனா அணி உலகக்கோப்பையைக் கையில் ஏந்தும் அளவுக்கு, வெற்றி மேடையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ஆர்ஜென்டீனா உலகக்கோப்பையை வென்றதும், ‘மாரடோனா எங்கள் நடுவில் இருந்து எங்களை வழிநடத்தினார்’ என்று ஸ்கலோனி கூறியது அருமை. ‘இந்த உலகக் கோப்பையைக் கடவுள் எங்களுக்குத்  தருவார் என்பது முன்பே தெரியும்’ என்று மெஸ்ஸி பெருமிதம் பொங்கக் கூறியிருக்கிறார். ஒருவேளை அந்தக் கடவுள், கால்பந்தாட்டக் கடவுளான மாரடோனாவாகக் கூட இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com