விராட் கோலியைக் கொண்ட இந்தியாவைப் பார்த்து எதிரணி பயப்படும்: பாண்டிங்

தனக்காக அணி வீரர்கள் கவலைப்படுகிறார்கள் என அவர் எண்ணக்கூடும்.
விராட் கோலியைக் கொண்ட இந்தியாவைப் பார்த்து எதிரணி பயப்படும்: பாண்டிங்

விராட் கோலியைக் கொண்டுள்ள இந்திய அணியைப் பார்த்து எதிரணி பயப்படும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சதமடிக்காமல் உள்ளார் விராட் கோலி. இங்கிலாந்தில் விளையாடிய ஆறு இன்னிங்ஸில் ( ஒரு டெஸ்ட், தலா 2 ஒருநாள், டி20) மொத்தமாக 76 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அஸ்வினை நீக்கமுடியும் என்றால் கோலியையும் நீக்கலாம் என முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் இதேபோல பேசியுள்ளார்கள்.

ஐசிசிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

எதிரணி கேப்டனாகவோ வீரராகவோ நான் இருந்தால் விராட் கோலி இல்லாத அணியை விடவும் விராட் கோலியைக் கொண்டிருக்கும் இந்திய அணியைப் பார்த்துதான் நான் பயப்படுவேன். கோலி தற்போது சவால்களை எதிர்கொண்டிருப்பதை நான் அறிவேன். அவருக்கு இது கடினமான நேரம். ஆனால் இந்த விளையாட்டில் நான் கண்ட ஒவ்வொரு மகத்தான வீரரும் கடினமான தருணங்களை எதிர்கொண்டுள்ளார்கள். சிறந்த வீரர் என்பவர் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழியைக் கண்டுபிடித்துவிடுவார். விராட் கோலிக்கு அது விரைவில் நிகழும். 

டி20 உலகக் கோப்பையின்போது கோலியை  அணியிலிருந்து நீக்கிவிட்டால், அவருக்குப் பதிலாக வாய்ப்பைப் பெற்ற வீரர் நன்றாக விளையாடிவிட்டால் கோலியால் அணிக்குள் மீண்டும் நுழைவது கடினமாகி விடும். நான் இந்திய அணியில் இருந்திருந்தால் விராட் கோலிக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் தருவேன். இதனால் கிடைக்கும் பலன்களை நான் அறிவேன். நான் இந்திய அணியின் பயிற்சியாளராகவோ கேப்டனாக இருந்தால் கோலியை நன்குக் கவனித்து, செளகரியமாக உணரவைத்து அவரை மீட்டுக்கொண்டு வருவேன். டி20 உலகக் கோப்பையில் ஆரம்பத்திலேயே கோலிக்கு வாய்ப்பளித்தால் போட்டி முடியும் தருணத்தில் அவர் நன்றாக விளையாட ஆரம்பிப்பார். 

கோலி தொடக்க வீரராகவும் விளையாடியுள்ளார். ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் 3-ம் நிலை வீரராகவும் விளையாடியுள்ளார். கோலியைத் தொடக்க வீரராகவோ அல்லது 3-ம் நிலை வீரராகவோ எனப் பல்வேறு நிலைகளில் விளையாட வைத்தால் தனக்காக அணி வீரர்கள் கவலைப்படுகிறார்கள் என அவர் எண்ணக்கூடும். இதனால் அவர் பாதிக்கப்படுவார். நான் மாற்று வழியில் செல்வேன். இது தான் உன் இடம். இங்குதான் நீ விளையாடுகிறாய். இதை மாற்ற மாட்டோம். நம்பிக்கையுடன் விளையாடு என்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com