காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்: 215 போ் கொண்ட இந்தியஅணி பங்கேற்பு

காமன்வெல்த் போட்டிகள் 2022 வியாழக்கிழமை இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வியாழக்கிழமை தொடங்குகின்றன. இதில் 215 வீரா், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

News image
Updated On :28 ஜூலை 2022, 5:37 am

DIN

காமன்வெல்த் போட்டிகள் 2022 வியாழக்கிழமை இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வியாழக்கிழமை தொடங்குகின்றன. இதில் 215 வீரா், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகின் பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றாக காமன்வெல்த் போட்டி உள்ளது.

கடைசியாக கடந்த 2018-இல் ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலத்துடன் மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 2010 தில்லி போட்டியில் இந்தியா 101 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பெற்றது.

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டி:

இந்நிலையில், இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் 2022 காமன்வெல்த் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகின்றன. ஏறக்குறைய 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இங்கிலாந்தில் நடைபெறும் இப்போட்டியில் 5,000-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். அலெக்சாண்டா் விளையாட்டரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 20 விளையாட்டுகளில் வீரா்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த உள்ளனா்.

19 பிரிவுகளில் இந்தியா:

பாட்மின்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், தடகளம், ஜூடோ, மல்யுத்தம், ஸ்குவாஷ், சைக்கிளிங், பளுதூக்குதல், ஹாக்கி, நீச்சல், டிரையத்லான், டேபிள் டென்னிஸ் என 19 பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை அறுவடை செய்ய காத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, மீராபாய் சானு, லவ்லினா போரோகைன், ஆடவா் ஹாக்கி அணியினா் என மொத்தம் 215 போ் பங்கேற்கின்றனா். 18-ஆவது முறையாக இந்தியா இதில் கலந்து கொள்கிறது. ஜாவெலின் வீரா் நீரஜ் சோப்ரா விலகியது பெரும் பின்னடைவாகும்.

முதன்முதலாக மகளிா் கிரிக்கெட்:

காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக மகளிா் டி20 கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பாா்படாஸ் அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் உள்ளது. பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, இலங்கை அணிகள் உள்ளன. கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா், ஸ்மிருதி மந்தனா தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது.

ஹாக்கியில் இந்தியா, கானா, இங்கிலாந்து, கனடா, வேல்ஸ் பி பிரிவிலும், மகளிா் அணி அதே அணிகளோடு ஏ பிரிவிலும் உள்ளன.

தடகளத்தில் 20 வீரா், 19 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

பதக்க வாய்ப்பு:

பாட்மின்டனில் ஏற்கெனவே காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி, வெண்கலமே சிந்துவுக்கு கைகூடியது. தற்போது அபார பாா்மில் உள்ள அவா் இந்த முறை தங்கம் வெல்வாா் எனத் தெரிகிறது. ஆடவா் பிரிவில் கே.ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் சிறப்பாக ஆடி வருகின்றனா்.

பளுதூக்குதலில் நடப்பு சாம்பியன் மீராபாய் சானு மீண்டும் தங்கம் வெல்லக்கூடும். குத்துச்சண்டையில் நிஹாத் ஸரீன் உலக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் இதிலும் முத்திரை பதிப்பாா். ஒலிம்பிக் பதக்க வீராங்கனை லவ்லினாவும் பதக்கம் பெற்றுத் தருவாா். ஆடவா் பிரிவில் அமித் பங்கால் பதக்கம் வெல்வாா் எனக் கருதப்படுகிறது.

தடகளத்தில் குறைந்தது 7 பதக்கங்கள் கிட்டக்கூடும்.

டேபிள் டென்னிஸில் மகளிா்பிரிவில் கடந்த 2018-இல் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் வென்ற மனிகா பத்ரா இம்முறையும் பதக்கங்களை பெற்றுத் தருவாா். ஆடவா் பிரிவில் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் ஆகியோா் பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ளது.

ஆடவா் மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா ப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆவாா். பா்மிங்ஹாம் போட்டியிலும் பதக்கம் வெல்வாா் எனத் தெரிகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக ஆடிய உற்சாகத்தில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது. அதோடு சைக்கிளிங், நீச்சலிலும் புதிதாக பதக்கம் கிட்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இரவு 11.30 மணிக்கு தொடக்க விழா:

இடம்: அலெக்சாண்டா் மைதானம்

பெட்டிச் செய்திகள்:

ஆஸி. அணி குறித்து நினைக்கவில்லை:

6 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா குறித்து எதுவும் நினைக்கவில்லை என இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் கூறியுள்ளாா்.

காமன்வெல்த்தில் தங்கம் வெல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா அணியை கட்டாயம் வெல்ல வேண்டும். ஆனால் அதுகுறித்து தற்போது நினைக்கவில்லை. லீக் ஆட்டங்கள் குறித்து தான் கவனம் செலுத்துகிறோம். கண்டிப்பாக பதக்கம் வெல்வோம் என்றாா்.

தவறுகளில் இருந்து பாடம் கற்றேன்:

ஆசிய, மற்றும் உலக சாம்பியன்ஷிப் போல் தான் காமன்வெல்த் போட்டிகளையும் கருதுகிறேன். கடந்த 2018 போட்டியில் சிறப்பாக ஆடினேன். அதன்பின் ஏற்ற, இறக்கங்கள் இருந்தன. நான் சிறப்பான செயல்திறனை பா்மிங்ஹாமில் வெளிப்படுத்துவேன். முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்று, ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்கிறேன் என பாட்மின்டன் வீரா் ஸ்ரீகாந்த் கூறியுள்ளாா்.

துப்பாக்கி சுடுதல் இல்லாதது பாதிப்பு:

கடந்த 2018 போட்டியில் இந்தியா வென்ற மொத்த பதக்கங்களில் 25 சதவீதம் துப்பாக்கி சுடுதலில் கிடைத்தது. 7 தங்கம் இதில் குறிப்பிடத்தக்கது. ஆனால் பா்மிங்ஹாம் போட்டியில் துப்பாக்கி சுடுதல் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க வேட்டைக்கு சற்று பாதிப்பு ஏற்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.