பாதுகாப்பு உணர்வைத் தரும் மும்பை அணி: ஆர்ச்சர்

ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி என்னைத் தேர்வு செய்ததால் உற்சாகம் அடைந்தேன்...
பாதுகாப்பு உணர்வைத் தரும் மும்பை அணி: ஆர்ச்சர்

ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி என்னைத் தேர்வு செய்ததால் உற்சாகம் அடைந்தேன் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார். டிசம்பர் 11 அன்று முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஆர்ச்சர். இதையடுத்து இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. 

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி ஆர்ச்சரைத் தக்கவைக்கவில்லை. 2-வது அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்ச்சர் பங்குபெறுவாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8 கோடிக்கு ஆர்ச்சரைத் தேர்வு செய்தது மும்பை அணி. இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்ச்சர் விளையாடாமல் போனாலும் அடுத்த வருடம் விளையாடுவதாகக் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் ஆர்ச்சர் கூறியதாவது:

மும்பை அணி என்னைத் தேர்வு செய்ததை அறிந்தபோது உற்சாகம் ஆனேன். அருமையான அணி அது. முதல்முறையாக பொலார்டுடன் இணைந்து விளையாடுகிறேன். நான் விரைவாகக் குணமாகி வருகிறேன். எனினும் அடுத்த வருடம் தான் விளையாடுவேன். என்னுடைய ஆரம்பகாலப் பயிற்சியாளர்களில் ஒருவர், ஜெயவர்தனே. மும்பை அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதில் ஆச்சர்யமில்லை. பொலார்ட் 10 வருடங்களாக விளையாடுகிறார். மலிங்காவும் நீண்ட காலம் விளையாடினார். ரோஹித் சர்மாவும் தான். இந்த அம்சங்கள் ஒரு புது வீரராக அணிக்குள் நுழையும்போது பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. புதுச் சூழல் நல்லது. இதனால் உங்களுக்கு நீங்களே சவால் அளித்துக் கொள்கிறீர்கள். பாதுகாப்பான சூழலில் நன்கு விளையாடுவது வேறு. கிறிஸ்டியானோ ரொனால்டோ எங்குச் சென்றாலும் நன்கு விளையாடுவார். அவருடைய திறமையை யாரும் இப்போது குறை சொல்ல முடியாது. அதேதான் எல்லோருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com