டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் வீரர் சுநீல் கவாஸ்கர்.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மாற்று வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.
டி20 உலகக் கோப்பை அணி பற்றி முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:
15 பேர் கொண்ட அணியில் இடம்பெறாததால் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னோய் மனம் தளரக்கூடாது. அவர் பக்கம் வயது உள்ளது. அடுத்த சில வருடங்களில் மற்றொரு டி20 உலகக் கோப்பை வரப்போகிறது. எதிர்காலத்தில் ஏராளமான டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அவரால் விளையாட முடியும். தன்னை நீக்க முடியாதபடி இனி அவர் விளையாட வேண்டும். அவர் ஓர் இளம் வீரர். தன்னால் எல்லா அணிகளிலும் இடம்பெற முடியாது என்பதை தெரிந்துகொள்ள இது நல்ல அனுபவமாக இருக்கும்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சரியான தேர்வாகத் தெரிகிறது. பும்ராவும் ஹர்ஷல் படேலும் மீண்டும் அணிக்குள் வந்ததால் இந்தியாவால் ஸ்கோரைத் தற்காத்துக் கொள்ள முடியும். அர்ஷ்தீப் சிங்கைத் தேர்வு செய்திருப்பது இந்திய அணிக்கு ஒரு இடக்கைப் பந்துவீச்சாளரைத் தந்துள்ளது. நான் கூறியது போல இது நல்ல அணியாகத் தெரிகிறது. இது சரியில்லை, அது சரியில்லை என நாம் குறை கூறலாம். ஆனால் இந்திய அணியைத் தேர்வு செய்து முடித்து விட்டார்கள். இதுதான் இந்திய அணி. அது இல்லை, இது ஏன் இல்லை எனக் கேட்க வேண்டாம். இந்த அணிக்கு 100 சதவீத ஆதரவை நாம் தர வேண்டும் என்றார்.