தேர்வுக்குழுத் தலைவராக நான் இருந்திருந்தால்...: உலகக் கோப்பைக்கான இந்திய அணி பற்றி ஸ்ரீகாந்த்

ஐபிஎல் போட்டியிலும் நன்கு விளையாடினார். எனவே என்னுடைய அணியில்...
தேர்வுக்குழுத் தலைவராக நான் இருந்திருந்தால்...: உலகக் கோப்பைக்கான இந்திய அணி பற்றி ஸ்ரீகாந்த்

டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஷமி இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் வீரர் கிருஷ் ஸ்ரீகாந்த்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மாற்று வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.

இந்நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஷமி இடம்பெறாதது பற்றி முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது:

இந்திய அணியில் ஷமி இடம்பெற்றிருக்க வேண்டும். நீங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறீர்கள். அங்கு பந்தை எகிறவைக்க அவரால் முடியும். முதல் 3 ஓவர்களில் அவரால் 2-3 விக்கெட்டுகளை எடுக்க முடியும். தேர்வுக்குழுத் தலைவராக நான் இருந்திருந்தால்.... இந்திய அணியில் ஷமி நிச்சயமாக இருந்திருப்பார். நாம் ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறோம். அதற்கேற்றவாறு அவரால் விதவிதமாகப் பந்துவீச முடியும். ஹர்ஷல் படேலுக்குப் பதிலாக ஷமியை நான் தேர்வு செய்திருப்பேன். ஹர்ஷல் படேலும் நல்ல பந்துவீச்சாளர் தான். ஆனால் ஷமி பொருத்தமான பந்துவீச்சாளர். ஐபிஎல் போட்டியிலும் நன்கு விளையாடினார். எனவே என்னுடைய அணியில் ஷமி நிச்சயம் இடம்பெற்றிருப்பார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com