அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை: டி20 லீக் போட்டிக்குத் தேர்வாகாத தெ.ஆ. கேப்டன்

எனக்கு வருத்தம் இல்லை என்று சொன்னால் பொய் சொலவதாக ஆகிவிடும்.
அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை: டி20 லீக் போட்டிக்குத் தேர்வாகாத தெ.ஆ. கேப்டன்

டி20 லீக் போட்டிக்கான ஏலத்தில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் வெள்ளைப் பந்து கேப்டன் டெம்பா பவுமா. 

2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். தெ.ஆ. டி20 லீக் போட்டியின் தலைவராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் செயல்படுவார்.  இந்த டி20 லீக் போட்டிக்கு எஸ்ஏ20 (SA20) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டனாகச் செயல்படவுள்ள டெம்பா பவுமாவை வீரர்களின் ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதேபோல தெ.ஆ. டெஸ்ட் கேப்டன் டீன் எல்கரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. ஏலத்தில் பவுமாவின் அடிப்படை விலையாக ரூ. 38.25 லட்சமும் எல்கரின் அடிப்படை விலையாக ரூ. 7.87 லட்சமும் இருந்தன. எனினும் எந்த அணியும் இருவரையும் சீந்தவில்லை. தென்னாப்பிரிக்கா புதிதாக ஆரம்பித்துள்ள டி20 லீக் போட்டியில் தெ.ஆ. அணியின் டி20 உலகக் கோப்பை கேப்டனுக்கே இடமில்லை என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு விமர்சனங்களையும் வரவழைத்துள்ளது. சொந்த நாட்டில் அறிமுகமாகும் டி20 லீக் போட்டிக்குத் தேர்வாகாத ஒரு வீரர் எப்படி டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு கேப்டனாகத் தேர்வானார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.  

இந்தியாவில் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் பவுமா. அப்போது அவர் கூறியதாவது:

எஸ்ஏ20 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் எந்த அணியும் என்னைத் தேர்வு செய்யாதது குறித்து எனக்கு வருத்தம் இல்லை என்று சொன்னால் பொய் சொலவதாக ஆகிவிடும். அந்தப் போட்டியில் பங்கேற்கத் தயாராக இருந்தேன். எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. ஏமாற்றப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். அதற்காக (போட்டியில் பங்கேற்பதற்கான) உரிமை உள்ளதாக நான் எண்ணவில்லை. அதேசமயம் இதில் அதிகக் கவனம் செலுத்த விரும்பவில்லை. இது சரியான நேரமில்லை. இந்தியச் சுற்றுப்பயணம், உலகக் கோப்பைப் போட்டி தான் தற்போது முக்கியம். அணி வீரர்கள் என்னுடைய நண்பர்கள். எங்களுடைய உறவு, அணிக்கு அப்பாற்பட்டது. நான் எவ்விதமான அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. அணியின் கேப்டனாக எனக்கென்று சில பொறுப்புகள் உள்ளன. அதைச் சிறந்த முறையில் செய்யவேண்டும் என்றார்.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் செப்டம்பர் 28 முதல் தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com