காமன்வெல்த் போட்டிகள்: பதக்கப் பட்டியலில் முன்னேறியதா இந்தியா?

3-ம் நாள் வரை இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன்...
தங்கம் வென்ற மூவர் (மீராபாய் சானு, ஜெரிமி, அச்சிந்தா ஷூலி)
தங்கம் வென்ற மூவர் (மீராபாய் சானு, ஜெரிமி, அச்சிந்தா ஷூலி)

காமன்வெல்த் போட்டிகளின் 3-வது நாளன்று பளுதூக்கும் போட்டியில் இந்திய அணி மேலும் 2 தங்கங்களை வென்றது. இதனால் பதக்கப் பட்டியலில் 6-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பா்மிங்ஹம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 215 வீரா், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.    

இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகின் பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றாக காமன்வெல்த் போட்டி உள்ளது. கடைசியாக கடந்த 2018-ல் ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலத்துடன் மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 

பா்மிங்ஹம் காமன்வெல்த் போட்டிகளில் முதல் நாளன்று இந்திய அணி எந்தப் பதக்கத்தையும் பெறவில்லை. 

2-ம் நாளன்று 1 தங்கம் உள்பட நான்கு பதக்கங்கள் கிடைத்தன. பளுதூக்கும் போட்டியில் ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதுவே 2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி வென்ற முதல் பதக்கம். மீராபாய் சானு மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் இந்தியாவின் முதல் தங்கம் இது. இதன்பிறகு பிந்தியாராணி மகளிர் 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் 61 கிலோ எடைப்பிரிவில் குருராஜா வெண்கலம் வென்றார். 

3-ம் நாளன்று பளுதூக்கும் போட்டியில் இந்திய அணி 2 தங்கங்களை வென்றது. ஜெரிமி லால்ரினுங்கா  ஆடவர் 67 கிலோ பிரிவிலும் அச்சிந்தா ஷூலி ஆடவர் 73 கிலோ பிரிவிலும் தங்கம் வென்றார்கள்.  

காமன்வெல்த் போட்டிகளில் 3-ம் நாள் வரை இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. 

2018 காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி 66 பதக்கங்களை வென்றது. இந்தமுறையும் சாதிக்குமா இந்திய அணி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com