டிக்கெட் விற்பனை: ரூ. 40 லட்சம் வருமானம் ஈட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இந்தளவுக்கு இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
டிக்கெட் விற்பனை: ரூ. 40 லட்சம் வருமானம் ஈட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட்

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் டிக்கெட் விற்பனை மூலமாக ஈட்டிய வருமானம் ரூ. 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே), அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்), தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். இப்போட்டிக்கு ரூ.120 கோடியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு. 

அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் இணையத்தளத்தில் சென்னை ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இரு அரங்குகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பெரிய அரங்கில் நடைபெறும் ஆட்டங்களைக் காண்பதற்கான டிக்கெட்டுகள் ரூ. 300 முதல் ரூ. 8000 வரை விற்கப்படுகின்றன. சிறிய அரங்கின் டிக்கெட்டுகள் விலை ரூ. 200 முதல் ரூ. 6000 வரை. ரூ. 200, ரூ. 300 டிக்கெட்டுகள் பெண்கள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதில் சேராத இந்தியர்கள் ரூ. 2000, ரூ. 3000 விலையில் உள்ள டிக்கெட்டுகளை வாங்கலாம். வெளிநாட்டவர்களுக்கு ரூ. 6000, ரூ. 8000 விலையில் உள்ள டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

இரு அரங்குகளிலும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 700 பேர் வரையிலான பார்வையாளர்களே அனுமதிக்கப்படுகிறார்கள். ரூ. 200 மற்றும் ரூ. 300 டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் அரங்கில் இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதிகக் கட்டணங்களைக் கொண்ட டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் போட்டியை முழு நாளும் பார்வையிட அனுமதி உண்டு. முதல் அரங்கில் தரவரிசையில் முன்னணியில் உள்ள அணிகளின் வீரர்கள் பங்கேற்பார்கள். 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் டிக்கெட் விற்பனை மற்றும் விளம்பரச் செயல்பாடுகளின் தலைவரான பிரஃபுல் ஸவேரி, செஸ்பேஸ் இந்தியா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இந்தளவுக்கு இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. டிக்கெட் விற்பனையின் மூலம் இதுவரை ரூ. 40 லட்சம் வருமானமாகக் கிடைத்துள்ளது. 3,700-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை விடவும் இந்தமுறை டிக்கெட் விற்பனை மூலம் ஈட்டும் வருமானத்தில் புதிய சாதனை படைப்போம் என எதிர்பார்க்கிறோம். டிக்கெட் விற்பனை வருமானத்தில் விரைவில் ரூ. 50 லட்சத்தைத் தொடவுள்ளோம். ரூ. 75 லட்சத்தை அடைவோமா என இனிமேல் தான் தெரியும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற செஸ் போட்டிகளில் வென்ற மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள். இதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வந்த 350 மாணவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com