நெருக்கடி அளித்த வங்கதேசம்: முதல் நாளில் இந்தியா 278/6

இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.
ஷ்ரேயஸ் ஐயர்
ஷ்ரேயஸ் ஐயர்

வங்கதேசத்துக்கு எதிரான முதல்  டெஸ்டில் இந்திய அணி முதல் நாளன்று 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது

சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு ராகுலும் ஷுப்மன் கில்லும் 41 ரன்கள் சேர்த்தார்கள். எனினும் ஷுப்மன் கில் 20 ரன்களுக்கும் ராகுல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு விராட் கோலியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. புஜாரா 12, ரிஷப் பந்த் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

சர்வதேச கிரிக்கெட்டில் இன்று 4,000 ரன்களைப் பூர்த்தி செய்த ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50-வது சிக்ஸரை அடித்தார். 54 இன்னிங்ஸில் இந்த எண்ணிக்கையை அடைந்து குறைந்த இன்னிங்ஸில் 50 சிக்ஸர்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து மெஹிதி ஹசன் பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். 

இன்றும் தனது வழக்கமான நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தார் புஜாரா. பந்த் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் புஜாராவுக்கு நல்ல இணையாக விளங்கினார். இருவரும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இந்திய அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. புஜாரா 42, ஷ்ரேய்ஸ் ஐயர் 41 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகும் புஜாரா - ஷ்ரேயஸ் கூட்டணி தொடர்ந்தது. புஜாரா 125 பந்துகளிலும் ஷ்ரேயஸ் 93 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 149 ரன்கள் சேர்த்தார்கள். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, தைஜுல் இஸ்லாம் பந்தில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு அக்‌ஷர் படேல் களமிறங்கினார். அதிர்ஷ்டம் ஷ்ரேயஸ் ஐயர் பக்கம் இருந்தால் இரு முறை ஆட்டமிழக்கும் வாய்ப்பிலிருந்து தப்பித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்களில் இருந்தபோது மெஹிதி ஹசன் பந்தில் ஷ்ரேயஸ் ஐயர் கேட்ச் கொடுத்தும் எபடாட் நழுவவிட்டார். 77 ரன்களில் இருந்தபோது எபடாட் வீசிய பந்து, ஸ்டம்புகளில் உரசியும் பைல்ஸ் கீழே விழாததால் தப்பித்தார் ஸ்ரேயஸ். அக்‌ஷர் படேல் 3 ரன்களில் இருந்தபோது ஷார்ட் லெக் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் நடுவர் அதைச் சரியாகக் கவனிக்காததால் அக்‌ஷர் படேலும் தப்பித்தார். எனினும் முதல் நாளின் கடைசிப் பந்தில் அக்‌ஷர் படேல் 14 ரன்களில் மெஹிதி ஹசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார். தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளியும் மெஹிதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com