குல்தீப் யாதவ் நீக்கம்: ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அதிருப்தி!

இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
குல்தீப் யாதவ் நீக்கம்: ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அதிருப்தி!


வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருந்ததால் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது இந்திய அணி. இதனால் கடந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாகத் தேர்வான குல்தீப் யாதவ் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகள் எடுத்ததுடன் முதல் இன்னிங்ஸில் 40 ரன்களும் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார் குல்தீப் யாதவ். இதனால் 2-வது டெஸ்டிலும் அவருடைய பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் உனாட்கட்டுக்காக குல்தீப் யாதவை நீக்கியுள்ளார்கள் கேப்டன் கே.எல். ராகுலும் பயிற்சியாளர் டிராவிடும். 

குல்தீப் யாதவை நீக்கிய முடிவை நம்பமுடியவில்லை எனக் கருத்து தெரிவித்தார் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கவாஸ்கர். சமூகவலைத்தளத்தில் ரசிகர்களும் நிபுணர்களும் முன்னாள் வீரர்களும் குல்தீப் யாதவின் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் எழுதியுள்ளார்கள். 

குல்தீப் யாதவுக்கு இதுபோல நடப்பது முதல்முறையல்ல. 2019-ல் சிட்னி டெஸ்டில் 5 விக்கெட்டுகள் எடுத்தார் குல்தீப் யாதவ். அதன்பிறகு அடுத்த இரு வருடங்களுக்கு அவர் ஒரு டெஸ்டும் விளையாடவில்லை. இதுவரை அவர் விளையாடிய 8 டெஸ்டுகளில் 2 டெஸ்டுகளில் மட்டுமே அடுத்தடுத்த ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். 

முதல் டெஸ்ட் - 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
2-வது டெஸ்ட் - 2 டெஸ்டுகளைத் தவறவிட்டு இலங்கையில் விளையாடினார்
3-வது டெஸ்ட் - லார்ட்ஸில் 8 டெஸ்டுகளைத் தவற விட்ட பிறகு விளையாடினார் 
4-வது டெஸ்ட் - 3 டெஸ்டுகளைத் தவற விட்ட பிறகு ராஜ்கோட்டில் மே.இ. தீவுகளுக்கு எதிராக விளையாடினார் 
5-வது டெஸ்ட் - மே.இ. தீவுகளுக்கு எதிராக விளையாடினார், முதல்முறையாக எந்த டெஸ்டையும் தவற விடாமல்
6-வது டெஸ்ட் - 3 டெஸ்டுகளைத் தவற விட்ட பிறகு 2019 சிட்னியில் விளையாடினார்
7-வது டெஸ்ட் - 14 டெஸ்டுகளைத் தவற விட்ட பிறகு 2021-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார் 
8-வது டெஸ்ட் - 15 டெஸ்டுகளைத் தவற விட்ட பிறகு வங்கதேசத்துக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடினார் 

மீண்டும் அணியிலிருந்து நீக்கம்

குல்தீப் யாதவ் அறிமுகத்துக்குப் பிறகு இந்திய அணி விளையாடிய 54 டெஸ்டுகளில் 8-ல் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com