நீண்ட நாளைக்குப் பிறகு இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர்!

மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்ட ஆர்ச்சருக்குக் கடந்த மே மாதம் மீண்டும் காயம் ஏற்பட்டது.
நீண்ட நாளைக்குப் பிறகு இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர்!

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடவுள்ளார் பிரபல வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

2021-ம் வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார். டிசம்பர் 11 அன்று முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஆர்ச்சர். 

கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆர்ச்சரை ரூ. 8 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி. இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்ச்சர் விளையாடவில்லையென்றாலும் அடுத்த வருடம் அவர் விளையாடுவார் என மும்பை அணி நம்பிக்கையுடன் உள்ளது. 

மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்ட ஆர்ச்சருக்குக் கடந்த மே மாதம் மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் சில காலம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த இரு வருடங்களிலும் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆர்ச்சர் விளையாடவில்லை. 

இந்நிலையில் காயத்திலிருந்து முற்றிலும் குணமாகிவிட்ட ஆர்ச்சர், இங்கிலாந்து அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவில் விளையாடவுள்ள இங்கிலாந்து ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார் ஆர்ச்சர்.

ஒருநாள் தொடரில் விளையாடும் முன்பு, எஸ்ஏ 20 லீக் போட்டியில் எம்ஐ கேப் டவுன் அணிக்காக இரு ஆட்டங்களில் விளையாடவுள்ளார். எஸ்ஏ 20 லீக் போட்டி ஜனவரி 10 முதல் தொடங்கவுள்ளது. 

பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் 3 சதங்களுடன் 468 ரன்கள் எடுத்த ஹாரி புரூக், ஒருநாள் அணியில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளார். 2016-க்குப் பிறகு பென் டக்கெட்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக லிவிங்ஸ்டனுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹாரி புரூக், சாம் கரண், பென் டக்கெட், மலான், அடில் ரஷித், ஜேசன் ராய், பில் சால்ட், ஆலி ஸ்டோன், டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com