100-வது டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்த 2-வது வீரர்: வார்னர் சாதனை!

100-வது டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்த 2-வது வீரர்: வார்னர் சாதனை!

100-வது டெஸ்டில் இரட்டைச் சதமெடுத்த 2-வது வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்
Published on

100-வது டெஸ்டில் இரட்டைச் சதமெடுத்த 2-வது வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ஆஸ்திரேலியத் தொடக்க வீரர் டேவிட் வார்னர்.

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இரு நாள்களில் தோல்வியடைந்தது. இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

இந்த டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மோசமாக பேட்டிங் செய்ததால் முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. அணி 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. வார்னர் 32, லபுஷேன் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர், 144 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இதன்மூலம் 100-வது டெஸ்டில் சதமடித்த 10-வது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். இதற்குப் பிறகும் வார்னர் தொடர்ந்து நன்கு விளையாடி ரன்கள் சேர்த்தார். 222 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு விரைவாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார். கடைசியில் 254 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதமெடுத்தார். இதன்மூலம் 100-வது டெஸ்டில் அலாஸ்டர் குக்குக்கு அடுத்ததாக இரட்டைச் சதமெடுத்த 2-வது வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். 

மெல்போர்னில் இன்று அடித்த வெயிலால் சோர்வான வார்னர், தசைப்பிடிப்பு காரணமாக ரிடையர்ட் ஹர்ட் முறையில் 200 ரன்களுடன் வெளியேறினார். ஸ்மித் அவருக்கு முன்பே 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 83 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 33, கிரீன் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com